2009 ஐபிஎல்-ல் என் அண்ணன் பந்தில் ஒரு சிக்ஸர் அடித்தேன்; அன்று முழுவதும் சிரிக்கவே இல்லை! – வேடிக்கையான நிகழ்வை பகிர்ந்த இர்ஃபான் பதான்!|

0
294
Irfan Pathan

உலகக் கிரிக்கெட்டில் சகோதரர்களாக ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாக், மார்க் வாக் மற்றும் ஜிம்பாப்வேவின் ஆன்டி பிளவர் மற்றும் கிராண்ட் ஃபிளவர் ஆகியோரை 90களில் கிரிக்கெட் பார்த்தவர்கள் அறிவார்கள். தற்சமயம் இங்கிலாந்தின் கிரிக்கெட் சகோதரர்களாக டாம் கரன், சாம் கரன் ஆகியோர் இருக்கிறார்கள்!

இவர்களைப் போல இந்தியக் கிரிக்கெட்டில் யூசுப் பதான், இர்ஃபான் பதான் இருவரும் சகோதரர்களாக பிரசித்தம். இந்திய அணியில் ஒன்றாக விளையாடி உள்ள இவர்கள், ஐபிஎல் தொடரில் ஒரே அணியில் விளையாடியது கிடையாது.

- Advertisement -

யூசுப் பதான் வார்ன் தலைமையில் முதல் ஐபிஎல் தொடரை ராஜஸ்தான் ராயல் கைப்பற்றிய பொழுது அந்த அணியில் முக்கியமான வீரராக இருந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 2011 முதல் 17 வரை இருந்தார். அடுத்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் 2018 மற்றும் 19 ஆண்டுகளில் இருந்தார். இந்த இரண்டு அணிகளும் ஐபிஎல் தொடரை கைப்பற்றும்போதும் இவர் அந்த அணிகளில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் 2007 ஆம் ஆண்டு முதல் டி20 உலக கோப்பையை மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய அணி கைப்பற்றிய பொழுதும் இவர் அணியில் இருந்தார்.

இளையவரான இர்பான் பதான் மொத்தம் ஒன்பது ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாடியிருக்கிறார். கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர் டெவில்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிகளுக்காக விளையாடி உள்ளார்.

தற்பொழுது 2009 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற இரண்டாவது ஐபிஎல் தொடரில் தனது சகோதரருடன் நடைபெற்ற ஒரு சுவாரசிய சம்பவத்தை இர்பான் பதான் ஒரு நிகழ்வில் அவரை வைத்துக் கொண்டு பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் பொழுது
” இது நடந்தது 2009 ஆம் ஆண்டு. நான் அப்பொழுது பஞ்சாப் அணிக்காகவும் என் அண்ணன் யூசுப் வார்ன் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் விளையாடிக்கொண்டிருந்தோம். அப்பொழுது ஷேன் வார்ன் என் அண்ணன் ஓவரில் நான் அடிக்க மாட்டேன் என்று அவரை கொண்டு வந்தார். ஆனால் நான் அவரது பந்தை சிக்ஸருக்கு தூக்கி அடித்தேன். அது என் சகோதரருக்கு எதிராக எனக்கு மிகவும் பிடித்த தருணம். அதன் பிறகு அவர் பேட்டிங் செய்ய வந்த பொழுது ஆடுகளத்திலோ அல்லது ஹோட்டலிலோ முழு நாளும் அவர் முகத்தில் புன்னகை இல்லை. ஏமாற்றத்தையே பார்க்க முடிந்தது!” என்று கூறி சிரித்தார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” எங்கள் குடும்பத்தில் மூத்த சகோதரருக்கு எப்பொழுதும் ஆதரவு அதிகமாக இருக்கும். ஏனென்றால் அவர் அதிகம் எதுவும் பேச மாட்டார் என்று சொல்லி அவரை ஆதரிப்பதாக கூறுவார்கள். ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்கு நாங்கள் விளையாட வேண்டும் என்று எங்களுக்கு ஆசை இருந்தது. இப்போது நாங்கள் ஓய்வு பெற்ற வீரர்களுக்கான லீகில் ஒரே அணியில் சேர்ந்து விளையாடுகிறோம். ஆனால் இந்த வாய்ப்பு எங்களுக்கு ஐபிஎல் தொடரில் ஒருபோதும் அமையவில்லை. நாங்கள் குடும்பத்தில் பிளவு இருக்கக் கூடாது என்பதற்காக இதை விரும்பினோம்!” என்று நகைச்சுவையாக கூறியிருக்கிறார்!