இதயத்துடிப்பை எகிறவைத்த ஆட்டம், நூலிழையில் போட்டியை ஜெயிக்க வைத்த கேன் வில்லியம்சன்..! – இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா!

0
533

போட்டியின் கடைசி ஓவர் வரை சென்ற ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. பரிதாபமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது இலங்கை அணி.

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலையில் இருந்தது. ஆனால் ஐந்தாம் நாள் ஆட்டம் நடைபெற்று வரும் நிலையை பார்க்கையில் போட்டி டிராவில் முடிவடையும் என்று தெரிகிறது.

இந்நிலையில் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரை கவனித்தாக வேண்டிய கட்டாயத்திலும் இருந்தது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இலங்கை அணி இரண்டையும் வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இரு அணிகளின் முதல் இன்னிங்ஸ் முடிவில் இலங்கை அணி 284 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. ஐந்தாம் நாள் ஆட்டத்தின் துவக்கத்தில் மழை குறுக்கீடு காரணமாக ஒரு ஷெஷன் முழுவதும் நடைபெறவில்லை. போட்டி டிராவில் முடிவடையலாம் என எதிர்பார்ப்பு நிலவியது.

- Advertisement -

பின்னர் துவங்கிய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய டெரல் மிட்ச்சல் மற்றும் கேன் வில்லியம்சன் இருவரும் ஆட்டத்தின் போக்கையே மாற்றி நியூசிலாந்து அணியால் வெற்றி பெற முடியும் என்ற நிலைக்கு கொண்டு சென்றனர்.

நான்காவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 162 ரன்கள் சேர்த்தனர். இதில் அதிரடியாக விளையாடி வந்த டெரல் மிட்ச்சல் 81 ரன்கள் அடித்து முக்கியமான கட்டத்தில் ஆட்டம் இழந்தார். இருப்பினும் களத்தில் கேன் வில்லியம்சன் நின்று சதம் அடித்து அசத்தினார். அதன் பிறகும் ஆட்டம் முடியவில்லை.

பின்னர் வந்த வீரர்கள் ஓரிரு ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறியது நியூசிலாந்து அணிக்கு பின்னடைவை தந்தது. அதேநேரம் இலங்கை அணிக்கு இன்னும் வாய்ப்புகள் இருக்கிறது என்று நம்பிக்கையும் தந்தது. ஐந்தாம் நாளின் கடைசி ஓவர் வரை ஆட்டம் சென்றது.

கடைசி ஓவரில் நியூசிலாந்து அணி 8 ரன்கள் அடித்தால் வெற்றி பெற்று விடலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. இலங்கை அணி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்ற நிலையும் நீடித்தது. அபாரமாக பந்துவீசி வந்த அஷிதா பெர்னான்டோ கடைசி ஓவரை வீசினார். அதில் கேன் வில்லியம்சன் ஒரு பவுண்டரி அடித்து இலங்கை அணியின் நம்பிக்கையை உடைத்தார்.

கடைசி இரண்டு பந்துகள் இருந்தபோது ஒரு பந்தில் பவுன்சர் வீசி திணறடித்தார் அஷிதா பெர்னாண்டோ. கடைசி பந்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற ஒரு ரன் தேவைப்பட்டது. அப்போதும் ஒரு பவுன்சரை வீசினார். இம்முறை அந்த ரன்னை ஓடி எடுக்க முயற்சித்த போது ரன் அவுட் முயற்சியும் நடைபெற்றது. ஆனால் அது அவுட் இல்லை என முடிவு உறுதியானதால் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. கடைசி வரை நின்று வெற்றியை உறுதி செய்த கென் வில்லியம்சன் 121 ரன்கள் அடித்தார்.