“அவர் மறைந்து விட்டார் அவரை நிம்மதியாக இருக்க விடுங்கள்” – ஷேன் வார்ன் முன்னாள் மனைவி வருத்தம்!

0
1855
Warne

உலகக் கிரிக்கெட்டில் தன் மந்திர கைகளால் சுழற் பந்துவீச்சில், அசாத்தியமான முறையில் பல பேட்ஸ்மேன்களை வீழ்த்தி, பல சுவாரசியமான சம்பவங்களை நிகழ்த்தி காட்டியவர் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன்!

இவர் கடந்த ஆண்டு யாரும் எதிர்ப்பாராத விதமாக தாய்லாந்து கோ சாமுய் தீவில் விடுமுறையில் இருந்த பொழுது மார்ச் 14ஆம் தேதி தனது 52 வது வயதில் மரணம் அடைந்தார்.

- Advertisement -

இவருடைய மரணத்தின் அன்று அதுகுறித்து பலவாறான யூகங்களும் சந்தேகங்களும் கிளப்பப்பட்டு, உலகம் முழுவதும் பரபரப்பான செய்தியாக மாறியது. பின்பு மருத்துவத்துறை அவர் இயற்கையான முறையில் இறந்ததை உறுதிசெய்தது.

ஷேன் வார்ன தான் விளையாடும் காலத்தில் இருந்து அதிரடியான ஒரு நபராகவும், கேளிக்கைகளில் அதிகம் நாட்டம் கொண்டவராகவுமே இருந்து வந்தார். இதனால் களத்திற்கு வெளியே அவர் மீது பல விமர்சனங்கள் தொடர்ந்து இருக்கின்றன. ஆனால் அவர் களத்திற்குள் எப்பொழுதும் தனது 100 சதவீத உழைப்பை கொடுத்தவராகவே இருந்தார்.

இந்த நிலையில் அவர் இறந்து ஓராண்டு முடிந்ததும், அவர் அதிகமான தொடர்பு வைத்திருந்த தொலைக்காட்சி நிறுவனமான சேனல் 9 அவரைப் பற்றி ஒரு மினி தொடரைத் தயாரிக்கிறது. தற்பொழுது இதற்கு அவரது முன்னாள் மனைவியும், அவரது மூத்த மகளும் கடுமையான தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள்.

- Advertisement -

இதுகுறித்து அவரது முன்னாள் மனைவி
காலஹான் கூறும் பொழுது ” நான் இதைப் பற்றி அதிகம் அலச விரும்பவில்லை. ஆனால் இது நேர்மையற்றது மற்றும் அர்த்தமற்றது என்று நான் நம்புகிறேன். அவர் இறந்துவிட்டார், அவர் நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்.

அவரது இறப்பு நடந்து இவ்வளவு குறுகிய காலத்தில் இப்படி ஒன்றை கொண்டு வந்து வெளியில் வைப்பதன் மூலம் எந்தவிதமான இரக்கமும் அவர் மீது காட்டப்படவில்லை என்பதைத்தான் நான் உண்மையாக உணர்கிறேன்!” என்று கூறி இருக்கிறார்.

அவரது மூத்த மகள் கூறும் பொழுது
“உங்களில் யாருக்காவது அப்பா மீது மரியாதை இருக்கிறதா? அல்லது அவரது குடும்பத்தின் மீது மரியாதை இருக்கிறதா? அவர் உங்கள் சேனலுக்காக எவ்வளவு செய்தார். இப்போது அவர் இறந்து இத்தனை குறுகிய காலத்தில் அவரது வாழ்க்கையையும் எங்களது குடும்பத்தையும் நாடகமாக்க நினைக்கிறீர்களா? நீங்கள் மிகவும் மரியாதை குறைவாக இருக்கிறீர்கள்!” என்று கூறியிருக்கிறார்!