ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் 38வது ஆட்டத்தில், மும்பையின் வான்கடே மைதானத்தில் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் முக்கியமான ஆட்டத்தில் மோதின. இந்த ஆட்டம் இரசிகர்களுக்கு பரபரப்பான ஒரு ஆட்டமாக நடந்து முடிந்துள்ளது.
டாஸ் வென்ற ஜடேஜா பீல்டிங்கை தேர்வு செய்ய, பஞ்சாப் இன்னிங்ஸை துவக்க வந்த தவான் இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்று 88* [59] ரன்களை அடித்து பஞ்சாப் அணியை 187 ரன்களை இருபது ஓவர்களின் முடிவில் எட்ட வைத்தார்.
பின்பு 188 என்ற இலக்கோடு களமிறங்கிய சென்னை அணிக்கு அம்பதி ராயுடு தவிர யாரும் பெரிய பங்களிப்பை செய்யாததால் சென்னை அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று, ஏறக்குறைய ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பை இழந்திருக்கிறது என்றே சொல்லலாம்.
சென்னை அணியின் இந்த ஆட்டத்தின் தோல்விக்கான காரணங்கள் என்ன ?
டிவோன் கான்வோவை வெளியில் வைத்து துவக்க ஆட்டக்காரராக உயர்த்தப்பட்ட உத்தப்பாவின் சீரற்ற ஆட்டம் நல்ல துவக்கத்தைத்தர தவறி இருக்கிறது. கேப்டன் ஜடேஜாவின் மோசமான பேட்டிங் பார்ம் இந்த ஆட்டத்தின் தோல்விக்கு ஒரு முக்கியமான காரணமாகவே அமைந்திருக்கிறது. பத்து ஓவர்களை தாண்டி நின்ற ருதுராஜ் ரன் குவிக்க வேண்டிய நேரத்தில் சரியாக ஆட்டமிழந்தது பெரிய சரிவாக மாறிவிட்டது.
பஞ்சாப் அணியை எடுத்துக்கொண்டால் விக்கெட் தேவைக்காக கேப்டன் மயங்க் ரபாடாவை களமிறக்கிய இரண்டு ஸ்பெல்களிலும் ருதுராஜ், அம்பதி ராயுடுவை வெளியேற்றியது, டெத் ஓவரில் நெருக்கடியான நேரத்தில் அர்ஷ்தீப் இரண்டு ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டுமே தந்தது, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.பி.எல் திரும்பிய ரிஷிதவானின் தேவையான பவுலிங் பங்களிப்பு வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்திருக்கிறது!