இந்தியாவிற்கு நீண்ட காலத்திற்குப் பிறகு இடது கை தொடக்க ஆட்டக்காரராக 22 வயதான ஜெய்ஸ்வால் கிடைத்திருக்கிறார். மேலும் இவர் பேட்டிங் திறமையில் மட்டுமில்லாமல் கிரிக்கெட் அறிவு மற்றும் மனநிலையிலும் உறுதியானவராக தெரிகிறார்.
இதன் காரணமாக இந்தியாவிற்கு முதல் முறையாக மற்ற பேட்ஸ்மேன்களை தாண்டி ஒரு இடது கை ஆட்டக்காரர் நட்சத்திர வீரராக உருவெடுக்கும் வாய்ப்பு அமைந்திருக்கிறது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் பேசி வருகிறார்கள். கங்குலி போன்றவர்கள் இருந்திருந்தாலும் அவர்கள் சச்சின் காலத்தில் அவருக்கு அடுத்த இடத்தில்தான் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடைபெற்றுக் கொண்டிருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மூன்று டெஸ்ட் 6 இன்னிங்ஸ்களில் ஜெய்ஸ்வால் ஒரு அரை சதம் மற்றும் இரண்டு இரட்டை சதங்கள் உடன் 545 ரன்கள் குவித்து மிரட்டி இருக்கிறார்.
இதில் ஜெய்ஸ்வால் பேட்டிங் செய்யும் முறை எதிரணியை ஒட்டுமொத்தமாக நம்பிக்கை இழக்க வைத்து விடுகிறது. காரணம் அவர் பாரம்பரிய முறையில் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுகிறார். அதே சமயத்தில் திடீரென டி20 கிரிக்கெட்டை நடுவில் கலந்து விளையாடி, எதிரணிக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் செய்து விடுகிறார்.
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் இரட்டை சதம் அடித்த பொழுது, முதல் 50 பந்துகளை பொறுமையாக எதிர்கொண்டார், அதற்கடுத்து மிக வேகமாக சென்று சதம் அடித்தார். இதேபோல்தான் அடுத்த 100 ரன்களை எடுக்கும் பொழுதும் செய்தார். அவருடைய இந்த புத்திசாலித்தனமான பேட்டிங் முறையால், அவரை கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கிறது. அனுபவ ஆண்டர்சனை ஹாட்ரிக் சிக்ஸ் அடித்தது, இருவரது வாழ்விலும் மறக்க முடியாத சம்பவமாக அமையும்.
இதுகுறித்து இங்கிலாந்து மைக்கேல் ஆதர்டன் கூறும் பொழுது ” ஜெய்ஸ்வால் அற்புதமான இளம் வீரர். அவரை இதற்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் பார்த்தது கிடையாது. இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களும் இந்த தொடருக்கு முன்பாக அவரை பார்க்கவில்லை. இப்பொழுது அவர் மிகவும் திறமையான வீரர் என்பதை இங்கிலாந்து ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள். அவருக்கு நிறைய ரன் பசி இருக்கிறது.
அவர் பந்தை நீண்ட தூரத்திற்கு அடித்து நொறுக்குகிறார். அவர் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் கட்டமைக்கப்பட்ட ஒரு பையன். அவர் நவீன டி20 கிரிக்கெட் வீரர். அதே சமயத்தில் அவர் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கான நுட்பங்களையும் கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க : அருகில் ஐபிஎல்.. சிவம் துபே காயம்.. சர்ப்ராஸ் கான் தம்பி முசிர் கானுக்கு வாய்ப்பு.. வெளியான தகவல்கள்
ஜிம்மி ஆண்டர்சனை தொடர்ந்து மூன்று சிக்ஸர்களுக்கு அடித்தார். அவரை இதுபோன்று யாரும் அலட்சியமாக நடத்துவது என்பது மிகவும் அரிதான ஒன்று” எனக் கூறியிருக்கிறார்.