நடப்பு ஐபிஎல் தொடரில் 10 வருடங்களுக்குப் பிறகு பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் மற்றும் ரிக்கி பாண்டிங் பயிற்சியில் தகுதி பெற்று இருக்கிறது. இந்த நிலையில் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார் என்பது குறித்து பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பேசியிருக்கிறார்.
நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 185 ரன்கள் துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 18 ஓவரில் இலக்கை எட்டி சாதாரணமாக வெற்றி பெற்று அசத்தியது. மேலும் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களையும் உறுதி செய்து முதல் தகுதி சுற்றில் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறது.
இதுகுறித்து பேசி இருக்கும் ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது “நான் ஸ்ரேயாஸ் ஐயருடன் சேர்ந்து மீண்டும் பணி புரிவதற்கு மிகவும் ஆர்வமாக இருந்தேன். இதன் காரணமாக மெகா ஏலத்தில் அவருக்காக நான் எவ்வளவு செலவு செய்யவும் தயாராக இருந்தேன். டெல்லி அணிகள் நாங்கள் இருந்த பொழுது எங்களுக்குள் ஒரு நல்ல பணி உறவு இருந்தது. நாங்கள் எங்கள் அணியை அப்பொழுது இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்று இருந்தோம்”
“நான் ஸ்ரேயாஸ் ஐயரை ஒரு நபராகவும் வீரராகவும் பல ஆண்டுகளாக அறிந்திருக்கிறேன். அவர் ஒரு தரமான நபர். நீங்கள் ஒரு மாற்றத்தை உருவாக்க விரும்பும் பொழுது, உங்களைச் சுற்றி தரமான நபர்கள் தேவையாக இருக்கிறார்கள். எனக்கு ஸ்ரேயாஸ் ஐயர் அப்படிப்பட்ட தரமான நபராக இந்த அணியை உருவாக்க கிடைத்தார்”
“நீங்கள் எங்கள் வீரர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக ஸ்ரேயாஸ் ஐயர் பற்றி கேட்டால் அவர்கள் அவருக்கு பெரிய பாராட்டை கொடுப்பார்கள். ஏனென்றால் அவர்களுடன் அவர் நிறைய நேரம் செலவிட்டார். அவர்களை மிகவும் உற்சாகப்படுத்தினார். தேவைப்படும் பொழுது அவர்களது முதுகில் தட்டிக் கொடுத்தார். சில நேரங்களில் வேறு மாதிரியாகவும் அவர்களுக்கு புரிய வைத்தார். இது ஒரு நல்ல தலைவருக்கான அடையாளம். இதுதான் அவர்களுக்கும் தேவையாக இருந்தது”
இதையும் படிங்க : முதல் நாள் பஸ் டிரைவர் வரை ஸ்ரேயாஸ் பாண்டிங் ஒரு வாக்குறுதி தந்தாங்க.. இப்ப வர காப்பாத்துறாங்க – ஷஷான்க் சிங் பேட்டி
“தற்போது நாங்கள் ஒரு அணியாக இந்த இடத்திற்கு வந்திருப்பது சாதனைதான். ஆனால் நாங்கள் திரும்பி பார்க்கும் பொழுது எதையும் சாதித்திருக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம். நாங்கள் முதல் போட்டியில் இருந்து எங்கள் வீரர்களிடம் இதைத்தான் சொல்லி வருகிறோம். எங்களுக்கு இன்னும் வேலை இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.