“ஒரு கட்டத்துக்கு மேல இந்திய பவுலர்களை பார்க்கவே பாவமா இருந்துச்சு” – கேன் வில்லியம்சன் பேட்டி!

0
2234

டாம் லேத்தம் ஆட்டம் என்னை மிரளவைத்தது என்று பேட்டியளித்துள்ளார் கேப்டன் கேன் வில்லியம்சன்.

ஈடன் பார்க் மைதானத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது.

இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர் முடிவில் 306/7 ரன்கள் ஸ்கொர் செய்தது. கேப்டன் ஷிகர் தவான்(72 ரன்கள்) மற்றும் சுப்மன் கில்(50 ரன்கள்) இருவரும் அரைசதம் அடித்து வெளியேறினர்.

ஷ்ரேயாஸ் ஐயர் 80 ரன்கள் ஸ்கொர் செய்ய, வாஷிங்டன் சுந்தர் 37 (16) ரன்கள் அடித்து 300 ரன்களை கடக்க உதவினார்.

இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு பின் ஆலன்(22), டிவான் கான்வே(24), டெரல் மிச்சல்(11) மூவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர்.

வில்லியம்சன் மற்றும் டாம் லேத்தம் இருவரும் சரிவிலிருந்து மீட்டு, அரைசதம் அடித்தபின், அடுத்த கியருக்கு ஆட்டத்தை மாற்றினர். இதில் லேத்தம் 76 பந்துகளில் சதம் அடித்தார்.

வில்லியம்சன் மற்றும் டாம் லேத்தம் ஜோடியின் பார்ட்னர்ஷிப் திருப்புமுனையாக அமைந்தது. 221 ரன்கள் சேர்த்த இந்த ஜோடி வெற்றியை உறுதி செய்தனர்.

லேத்தம் 104 பந்துகளில் 145 ரன்களும் வில்லியம்சன் 94 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். 47.1 ஓவர்களில் இலக்கை எட்டிய நியூசிலாந்து 309/3 எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

போட்டி முடிந்தபின் கேன் வில்லியம்சன் பேசியதாவது:

“நாங்கள் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் பொழுது பாதியில்தான் உணர்ந்தேன், இந்த ஸ்கோரை எளிதாக எட்ட முடியும் என்று. ஆனால் இலக்கை எட்ட நடுவில் நல்ல பார்ட்னர்ஷிப் வேண்டும். இதை லேத்தம் மிகச் சிறப்பாக செய்தார். குறிப்பிட்ட ஓவர்களுக்கு பிறகு அவர் ஆடிய விதம் தீயாக இருந்தது.

மிடில் ஓவர்களில் நாங்கள் இருவரும் பேசிக்கொண்டோம். கிடைக்கும் ஒவ்வொரு ஓவரையும் சரியாக பயன்படுத்தி மோசமான ஓவர்களில் நிறைய ரன்களை அடிக்கலாம் என்றும் பேசினோம். ஆனால் பேசிய அடுத்த ஓவரிலேயே ஆட்டத்தை மாற்றி அடுத்த கியருக்கு எடுத்துச் சென்றார்.

இந்திய பந்துவீச்சாளர்கள் நன்றாக பந்து வீசினார்கள். பந்து நேராக வந்தது. ஆனாலும் அடிப்பதற்கு எளிதாக இருந்ததால், ஆட்டம் அவர்களை விட்டு எங்களுக்கு திரும்பியது. ஓரிரு ஓவர்களிலேயே ஆட்டத்தின் போக்கை மாற்றிய லேத்தம் பேட்டிங் செய்ததை பார்க்கும் பொழுது நான் இதை அவரிடம் எதிர்பார்க்கவில்லையே என்ற எண்ணம் தான் தோன்றியது.

அப்போது இந்திய பவுலர்களை பார்க்கும் பொழுது சற்று வருத்தமாகவும் இருந்தது. நன்றாக வீசினாலும் ரன்கள் செல்கிறது என்ற ஏக்கத்துடன் பந்து வீசினார்கள். இருவரும் பேசிக் கொண்ட அடுத்த ஓவரிலேயே அவர் அதிரடியை துவங்கியதால் எனது வேலை எளிதாக முடிந்தது.

நடுவில் சிங்கிள் எடுத்து, நல்ல பார்மில் இருந்த அவர் விளையாட நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தேன். அதை பயன்படுத்தி ஒவ்வொரு ஓவரையும் நிறுத்தாமல் அடித்துக் கொண்டு இருந்தார். நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த ஆட்டங்களில் இது ஒன்று.

பேட்டிங் செய்வதற்கு மைதானம் சிறப்பாக இருந்தது. அதேநேரம் ஸ்பின்னர்கள் மிகப்பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தினர். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் நிறைய ரன்களை வாரி கொடுத்தாலும் சரியான தருணத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தியதால், 20-30 ரன்கள் குறைவாக எடுக்க வைக்க முடிந்தது.

மேலும் பேட்டிங்கில் முழு பங்களிப்பையும் லேத்தம் செய்தார். ஆகையால் அவரைப் பற்றி குறிப்பிட முடியாமல் இருக்க முடியவில்லை. அவர் ஆடியது எனக்கும் தாகத்தை ஏற்படுத்தி, நானும் சில பவுண்டரிகளை அடித்தேன்.” என்றார்.