“அவரை ஓய்வெடுக்கச் சொல்லுங்கள்” – இந்தியாவின் கேப்டன் பற்றிய கேள்விக்கு கிரேம் ஸ்மித் சர்ச்சை பதில்!

0
2087

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியின் தோல்வியை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் மீதான விமர்சனங்களும் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு எதிரான விமர்சனங்களும் தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வருகின்றன .

2021 ஆம் ஆண்டின் 20 ஓவர் உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரோகித் சர்மா 2022 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு பிறகு இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாகவும் இருந்து வருகிறார் .

- Advertisement -

இவரது தலைமையின் கீழ் இந்திய அணி உள்நாட்டு டெஸ்ட் போட்டிகளில் பல வெற்றிகளை பெற்றிருந்தாலும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களிலும் ஐசிசி போட்டித் தொடர்களிலும் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது . இதற்கு எதிராக பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் கடுமையான விமர்சனங்களை கூறி வருகின்றனர் .

மேலும் ரோகித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் கடந்த ஒரு வருடங்களாகவே சிறப்பானதாக இல்லை . ஒரு தொடரில் ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடும் அவர் மற்ற போட்டிகளில் சொற்பரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறுகிறார் . இதனால் அவர் மீதான அழுத்தமும் விமர்சனங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன .

இதுகுறித்து தனது கருத்துக்களை தெரிவித்திருக்கிறார் தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் கிரேம் ஸ்மித் . இதுகுறித்து பேசி இருக்கும் அவர் ” ரோகித் சர்மாவிற்கு ஒரு புத்துணர்ச்சி தேவைப்படுகிறது . நம்முடைய தனிப்பட்ட ஆட்டம் கேப்டன் பொறுப்பிலும் நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் . ரோகித் சர்மா ஒரு மிகச் சிறந்த வீரர் என்றாலும் கடந்த ஓராண்டுகளாக அவர் சிறப்பாக ஆடவில்லை . ஒரு அணிக்கு கேப்டனாக இருப்பதில் மிகப்பெரிய சவால் நம்முடைய தனிப்பட்ட பார்ம் . அது நிச்சயமாக போட்டியிலும் தலைமை பண்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்று” என்று தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” யாரும் தனிப்பட்ட முறையில் அவருடைய கேப்டன்சி ஸ்டைல் மற்றும் தலைமை பண்பை பற்றி விமர்சிக்கவில்லை அனைவரும் அவருடைய தனிப்பட்ட ஆட்டத் திறனை பற்றி தான் கேள்வி எழுப்புகின்றனர் . அவர் மிகச் சிறப்பாக தன்னுடைய பங்களிப்பை வழங்கினால் அதன் தாக்கம் கேப்டன் பொறுப்பில் நிச்சயமாக இருக்கும்” என்று தெரிவித்தார் .

முன்னாள் வீரர்களால் இந்திய அணிக்கு எதிராக வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதில் அளித்த அவர் ” உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடிய வீரர்கள் தான் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கு காரணமாக இருந்தவர்கள் என்பதை ஒரு தோல்வியை வைத்து நாம் மறந்து விடக்கூடாது” என கூறி முடித்தார்.