சூப்பர் ஸ்டார் வீரர்களுக்கு பஞ்சமே இல்லை… ஆனால் இந்திய அணியில் மாற்றவேண்டியது ஒன்று தான்; இல்லையெனில் அடுத்த 10 வருஷம் ஐசிசி கோப்பையை மறந்திடுங்கள் – மேத்தியூ ஹைடன் பேட்டி!

0
1575

‘இந்தியாவில் சிறந்த வீரர்களுக்கு பஞ்சம் இருந்தது இல்லை. ஆனாலும் அவர்கள் கோப்பையை வெல்ல முடியாமல் இருப்பதற்கு காரணம் இதுதான்.’ என்று தனது சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹைடன்.

ஐபிஎல் போட்டிகள் முடிவடைந்து இந்திய அணியினர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட லண்டன் சென்றுவிட்டனர். வருகிற ஜூன் ஏழாம் தேதி துவங்கி 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

- Advertisement -

தொடர்ந்து இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்திய அணி வந்திருக்கிறது. கடந்த முறை வரும்பொழுது நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவி ஏமாற்றத்துடன் வெளியேறியது. இம்முறை கோப்பையை வெல்ல வேண்டிய முனைப்பிலும் இருக்கின்றது.

கடைசியாக 2013ஆம் ஆண்டு இந்திய அணி சாம்பியன்ஸ் டிராஃபி வென்றது. அதன் பிறகு 10 வருடங்களுக்கு மேலாக ஐசிசி நடத்தும் எந்தவித தொடரிலும் கோப்பையை வெல்லவில்லை. இந்த களங்கத்தை போக்க இம்முறை கோப்பையை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய வீரர்கள் இருக்கின்றனர்.

கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இந்திய அணி எந்தவித ஐசிசி கோப்பையையும் வெல்லமுடியாமல் இருப்பதற்கு காரணம் என்ன? அவர்களிடம் என்ன குறை இருக்கிறது? ஆகியவை பற்றி தனது சமீபத்திய பேட்டியில் விவாதித்துள்ளார் மேத்யூ ஹைடன்.

- Advertisement -

“இந்திய அணி மற்றும் இந்திய வீரர்களைப் பொறுத்தவரை, அவர்களது திறமைகளில் எந்தவித சந்தேகமும் இல்லை. உலகத்தரம் மிக்க வீரர்கள். உள்ளூர் போட்டிகளிலும் உலக திறமைமிக்க வீரர்கள் பலர் இருக்கின்றனர்.

இவ்வளவு பெரியநாட்டில் இத்தனை திறமைமிக்க வீரர்கள் இருந்தும் 10 வருடங்களாக அவர்கள் கோப்பையை வெல்ல முடியாமல் இருப்பதற்கு காரணம், வீரர்களின் மத்தியில் நிலவி வரும் மனநிலை மட்டுமே. இத்தனை பேர் அணியில் இடம் கிடைக்குமா? என்று காத்துக் கொண்டிருக்கும் நிலையில், இடம் கிடைத்த வீரர்கள் அழுத்தம் இல்லாமல் சுதந்திரமாக விளையாட முடியவில்லை.

ரசிகர்கள் மத்தியில் அதிகமான எதிர்பார்ப்பு இருக்கும்பொழுது, வீரர்கள் மத்தியில் அதை பூர்த்தி செய்ய வேண்டும் என்கிற அழுத்தம் அதிகமாகவே இருக்கிறது. அதன் காரணமாகவே தடுமாற்றம் கண்டு வருகின்றனர்.

வீரர்கள் அனைவருக்கும் நான் சொல்லிக் கொள்ளும் ஒரு அறிவுரை என்னவென்றால், உங்களுடைய ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள்! கோப்பையை வெல்லமுடியுமா? முடியாதா? என்று எதைப் பற்றியும் சிந்திக்காமல் அழுத்தம் எடுத்துக்கொள்ளாமல் விளையாடுங்கள். அப்போதுதான் சுதந்திரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு சிறந்த பங்களிப்பை கொடுக்க முடியும்.

இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருக்கும் பிரச்சனை இதுதான். ரசிகர்கள் கிரிக்கெட்டை தங்களது வாழ்வில் ஒன்றாக பார்க்கின்றனர். ஆகையால் இவ்வளவு எதிர்பார்ப்பை வீரர்கள் மீது வைத்திருக்கின்றனர். நான் ஆஸ்திரேலியா அணிக்கு பல வருடங்கள் விளையாடியபோதும், வீதியில் நடந்த சென்றால் நான் யார் என்று பலருக்கும் தெரியாது.

ஆஸ்திரேலியாவில் பல்வேறு விளையாட்டுகள் மீது ரசிகர்கள் கவனம் செலுத்துகின்றனர். கிரிக்கெட் போன்று ரக்பி, கால்பந்து, டென்னிஸ் என அனைத்து விளையாட்டிலும் ஈடுபாட்டுடன் இருப்பதால், குறிப்பிட்ட ஒரு விளையாட்டின் வீரரை பெரிதளவில் அவர்களுக்கு ஞாபகம் இருப்பதில்லை. இந்தியாவில் உள்ளூர் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கும் இங்கு மவுசு அதிகம்.” என்றும் தெரிவித்தார்.