சொன்னா கேளுங்க.. ரிங்கு சிங்கை தோனியுடன் கம்பேர் பண்ணாதீங்க.. ஹர்ஷா போக்லே சொன்ன பரபரப்பான காரணம்

0
370

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலியா அணி 5 டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கலந்து கொண்ட 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர் உலகக்கோப்பைக்கு முன்பு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இந்த டி20 போட்டி தொடர்கள் நடைபெற்று வருகின்றன. முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் இருக்கிறது. இரண்டு அணிகளும் போதும் மூன்றாவது டி20 இன்று நடைபெற உள்ளது.

முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியின் இளம் வீரர் ரிங்கு சிங் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் அறிமுகமாகிய இவர் ஆஸ்திரேலியா அணியுடன் இரண்டு டி20 போட்டிகளிலும் இந்திய அணிக்கு சிறப்பான ஃபினிஷர் ஆக செயல்பட்டார்.

- Advertisement -

முதல் போட்டியில் இறுதிக்கட்டத்தில் இந்தியாவிற்கு விக்கெட் விழுந்த போதும் ஒரு முனையில் சிறப்பாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இரண்டாவது டி20 போட்டியில் 9 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து இந்தியா 235 ரன்கள் குவிக்க காரணமாக அமைந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான அபிஷேக் நாயர் ஆகியோர் ரிங்கு சிங்கை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியுடன் ஒப்பிட்டு பேசியிருந்தனர். தோனியை போன்றே பதற்றமான சூழ்நிலைகளில் கூட மிகவும் அமைதியாக இருந்து அணியை வெற்றிக்கு வழி நடத்திச் செல்வதாக தெரிவித்தனர். ரசிகர்களும் இந்திய அணிக்கு தோனி போன்ற ஒரு ஃபினிஷர் கிடைத்துவிட்டார் என தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்லே ரிங்கு சிங்கை தோனியுடன் ஒப்பிடாதீர்கள் என தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்து இருக்கிறார். இது தொடர்பாக தனது கருத்தை பதிவு செய்திருக்கும் அவர் ரிங்கு சிங்கை தோனியுடன் ஒப்பிடுவது அவர் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும். அதனால் அந்த இளம் வீரரை அவரது போக்கில் விளையாட விடுங்கள் எனவும் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் செய்திருக்கும் பதிவு வைரலாகி இருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து பதிவு செய்திருக்கும் ஹர்ஷா” கடந்த சில தினங்களாக சில செய்திகளை படித்து வருகிறேன். அதில் ரிங்கு சிங்கை மகேந்திர சிங் தோனியுடன் ஒப்பிட்டு அவரது பினிஷிங் ஸ்டைலை கொண்டாடி வருகின்றனர். ரிங்கு சிங் ஒரு அற்புதமான வீரர். அவரிடம் ஏராளமான திறமைகள் இருக்கிறது. தயவு செய்து அவரை தோனியுடன் ஒப்பிடாதீர்கள். மிகுந்த சிரமங்களை தனது வாழ்க்கையில் அனுபவித்து தனது கடினமான உழைப்பினால் இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார் ரிங்கு சிங்.

அவரது கிரிக்கெட்டை ரசித்து அவரை சுதந்திரமாக செயல்பட அனுமதியுங்கள். அந்த இளம் வீரர் தனது கிரிக்கெட்டை ரசித்து விளையாடட்டும். அவரை ரிங்கு சிங்காகவே இருக்க விடுங்கள். இன்னொருவரின் அடையாளத்தை அவர் மீது திணிக்காதீர்கள் என பதிவு செய்திருக்கிறார். இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் பரிசளிப்பு விழாவின் போது ரிங்கு சிங் இந்திய அணியின் முன்னாள் லெஜன்ட் ஒருவரை ஞாபகப்படுத்துகிறார் என தெரிவித்திருந்தார்.

மேலும் ரிங்கு சிங் பினிஷிங் வீரராக விளையாடுவது தோனியுடன் அவரை ஒப்பிடுவதற்கு ஒரு காரணமாகவும் அமைந்திருக்கிறது. இவரைப் போன்றே அவரும் பதட்டமில்லாமல் விளையாடுவதும் போட்டிகளில் இறுதிவரை நின்று இந்திய அணியை வெற்றி பெறச் செய்வதும் ரிங்கு சிங் மற்றும் தோனி இடையே ஒப்பீடுகளை ஏற்படுத்தி இருக்கின்றன. எனினும் ரிங்கு சிங் தற்போது தான் தனது கிரிக்கெட்டை தொடங்கி இருக்கிறார். இதுவரை 7 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போதைய அவரை தோனி போன்ற ஒரு லெஜன்ட் உடன் ஒப்பிடுவது அவர் மீது தேவையில்லாத அழுத்தங்களை ஏற்படுத்தும்.