“ஹர்திக் ஸ்ரேயாஸ் ரிஷப் பண்ட்.. அடுத்த கேப்டன் யார்?” – நெத்தியடியாக பதில் சொன்ன கம்பீர்!

0
2380
Gambhir

தற்போது இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் மிகவும் சிறப்பாக உலகக் கோப்பையில் செயல்பட்டு வருகிறது. அவருக்கு இதுதான் கடைசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை என்பது தெளிவாகத் தெரிந்த ஒரு விஷயம்.

அவர் மேற்கொண்டு அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் கேப்டனாக களம் இறங்குவாரா? மேலும் 2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபிக்கு தலைமை தாங்குவாரா? என்பது குறித்து எதுவும் தெரியாது.

- Advertisement -

அதே சமயத்தில் தற்பொழுது கேஎல் ராகுல் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்ற காரணத்தினால், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கேப்டனாக ரோகித் சர்மா ஓய்வு பெறும் பொழுது வருவதற்கு அதிக வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது.

மேலும் டி20 கிரிக்கெட்டுக்கு எப்பொழுதும் போல் ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருப்பதற்கான வாய்ப்புகளும் மிக அதிகமாக இருக்கிறது. அவர்தான் சமீபக் காலத்தில் இந்திய டி20 அணியை வழிநடத்தி வருகிறார்.

மேலும் நீண்டகால கேப்டனை கண்டறியும் வழிமுறையில் இளம் வீரர்களை தேர்வு செய்வதற்கு இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் இருக்கிறார்கள். இவர்கள் இருவருமே ஐபிஎல் தொடரில் கேப்டனாக இருப்பவர்கள்தான். எனவே இந்த வீரர்களில் யார் அடுத்த கேப்டனாக சரியானவர்கள் என்கின்ற கேள்வி கம்பீரிடம் முன்வைக்கப்பட்டது.

- Advertisement -

இதுகுறித்து கம்பீர் கூறும்பொழுது “இந்தியாவில் இது பெரிய பிரச்சனை.இங்கு ஒரு கேப்டன் சிறப்பாக செயல்பட்டு வருகிறார், ஆனால் சிறப்பாக செயல்படும் இளம் வீரர்களில் அடுத்த கேப்டன் யார் என்று நாம் பேசுகிறோம். அடுத்த இந்திய கேப்டன் யார் என்பதை எதற்காக இப்பொழுதே முடிவு செய்ய வேண்டும்?

ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய வீரர்கள் வளர்க்கப்பட்டது குறித்து நாம் பேசுகிறோம். ஆனால் அவர்கள் எப்படியான அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்பது குறித்து நாம் யோசித்தது உண்டா? நீங்கள் அவர்களை உருவாக்கி அவர்கள் அடுத்த ஆறு முதல் 12 மாதங்கள் சரியாக விளையாடவில்லை என்றால் என்ன செய்வீர்கள்? அடுத்து வேறு யாரையாவது யோசிப்பீர்களா?

எந்த ஒரு வீரர் இரண்டு மூன்று சதங்கள் அடித்தாலும் அவர்தான் அடுத்த கேப்டன் என்கின்ற பேச்சுகள் வந்து விடுகின்றன. அவர் பத்து மோசமான ஆட்டங்களை விளையாடி, அடுத்து யாராவது நன்றாக விளையாடினால், உடனே அவரை இந்திய வருங்கால கேப்டன் என்கிறார்கள்.

இது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. நான் இப்படி பேச வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன். வீரர்கள் தங்களுடைய விளையாட்டை ரசித்து விளையாடட்டும். இந்தியத் தேர்வாளர்கள் எது இந்திய கிரிக்கெட்டுக்கு சிறப்பானதோ அதை செய்வார்கள்!” என்று கூறியிருக்கிறார்!