இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் காலில் காயம் ஏற்பட்டு இந்திய அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகினார். இது தொடர்ந்து ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறியது என நிறைய பிரச்சினைகளை சந்தித்தார். தற்போது அந்தக் காலகட்டத்தை குறித்து அவருடன் இருந்த இஷான் கிஷான் பகிர்ந்திருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை விட்டு டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்ததோடு, அந்த அணியின் கேப்டன் பொறுப்புக்கும் கொண்டுவரப்பட்டார். இதன் காரணமாக அந்த அணிக்கு ஐந்து முறை கோப்பையை வென்ற வெற்றிகரமான கேப்டன் ரோகித் சர்மா பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
இதன் காரணமாக ஹர்திக் பாண்டியா சொந்த அணியின் ரசிகர்களாலே மைதானத்தில் கடுமையாக எதிர்க்கப்பட்டார். அணியும் மிக மோசமாக செயல்பட்டு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் வாய்ப்பை இழந்தது. மேலும் அவரை டி20 உலகக் கோப்பை இந்திய அணிகள் தேர்வு செய்வது சந்தேகம் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் தற்போது இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்றதற்கு ஒரு முக்கிய காரணமாக மாறி இருக்கிறார். இந்த நிலையில் அவருடன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடும் இஷான் கிஷான் இதை பகிர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து இஷான் கிஷான் கூறும்பொழுது ” மும்பை வான்கடே மைதானத்தில் அவர் டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து கையில் உலக கோப்பையுடன் வெளியே வந்த பொழுது, மைதானத்தில் இருந்த கூட்டமே வெடித்தது. இதுதான் அவருக்கான மீட்பு நேரம். அதைப் பார்த்த பொழுது நான் அதிகம் உணர்ச்சிவசப்பட்டேன்.
கடந்த ஆறு மாதங்களாக அவர் அனுபவித்த விஷயங்கள் வார்த்தைகளால் சொல்ல முடியாதது. அவரைப் பற்றி பலவிதமான விஷயங்கள் வெளியில் சென்றன. ஆனால் அவர் மனதை தைரியமாக வைத்திருந்தார். இந்த காலகட்டத்தில் பெரும்பாலான நேரத்தில் நான் அவருடன் இருந்தேன்.அவர் ஒருபோதும் தனக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று கேட்டதே கிடையாது. அவர் அமைதியாக இருந்து விளையாட்டில் கவனம் செலுத்தினார்.
அவருக்கு எதிராக மைதானத்தில் ரசிகர்கள் இருந்தார்கள். ஆனால் அவர் அதை பார்த்து உடையவில்லை. பெரிய வீரர்கள் தங்கள் வழியில் விஷயங்கள் செல்லாத பொழுது உணர்ச்சிகளை வெளியே காட்ட மாட்டார்கள். அவர்களுக்காக மற்றவர்கள் வருத்தப்படுவதை விரும்ப மாட்டார்கள். அவர் எல்லாவற்றையும் கைத்தட்டலாக மாற்றி திரும்பி வந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இதையும் படிங்க : இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் இவர்தான்.. ஈடன் கார்டனில் நடந்த முக்கிய சம்பவம்.. வெளியான தகவல்கள்
நாங்கள் ஐபிஎல் தொடரில் இருந்த பொழுது ஹர்திக் பாண்டியா கூறியது ஞாபகத்துக்கு வருகிறது. நம் கையில் இல்லாத விஷயங்கள் பற்றி நாம் கவலை படக்கூடாது, நம் மக்கள் என்ன பேசுகிறார்கள் என்பது குறித்து கவனம் செலுத்தினால், நாம் நம்மை இழக்க வேண்டியது வரும். இதேகூட்டம் என்னை எதிர்காலத்தில் கொண்டாடும். நாம் இதை விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். பிறகு அதுவேதான் நடந்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.