இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் களமிறங்க உள்ளன.
இந்த சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கடந்த ஆண்டு தான் எதிர்கொண்ட சிக்கல்கள் குறித்தும் அதிலிருந்து மீண்டு வந்த விதம் குறித்தும் சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.
தான் எதிர்கொண்ட சிக்கல்கள்
கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா அதிகாரப்பூர்வ கேப்டனாக அறிமுகப்படுத்தப்பட்டார். அப்போது இருந்தே பாண்டியா மீது குஜராத் மற்றும் மும்பை ரசிகர்கள் தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்களை வைத்துக் கொண்டே வந்தனர். குஜராத் அணியை விட்டு பாண்டியா வெளியேறினார் என்பதற்காகவும், ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ஹர்திக் பாண்டியா கொண்டுவரப்பட்டார் என்பதற்காகவும் இரு அணி ரசிகர்களும் பாண்டியா மீது அதிக அளவு கூச்சல்களை எழுப்பினர்.
இவை அனைத்தையும் அமைதியாக கடந்து வந்த பாண்டியா, தன் முழு கவனத்தை போட்டியின் மீது மட்டுமே செலுத்தி கடந்த டி20 உலக கோப்பையை வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தார். அந்தத் தருணமே அவர் மீதான எதிர்மறை விமர்சனங்கள் அனைத்தையும் நீக்கி பாராட்டுக்களை பெற்றுத்தர வழி வகுத்தது. இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு தனது சிக்கல்களை எதிர்கொண்ட விதம் குறித்து பாண்டியா சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.
என் வாழ்க்கை இங்கு மாறியது
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” எனக்கு நடந்த விஷயம் போர்க்களத்தை விட்டு வெளியேறாதது பற்றியதாகும். அதில் நான் எப்படி உயிர் வாழ்ந்தேன் என்பதை பற்றி இருக்குமே தவிர வெற்றி பெறுவதைப் பற்றி இருக்காது. அந்த வருடம் நான் எனது நிலையை பிடித்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது. அந்த கடினமான காலத்திலும் கிரிக்கெட் மட்டுமே என்னுடைய நண்பனாக இருந்தது. என்னை அனைத்து சிக்கல்களில் இருந்தும் கிரிக்கெட் மட்டுமே வெளியேற்றியது.
இதையும் படிங்க:அங்க கோலியை சுற்றிதான் எல்லாமே நடக்கும்.. பாவம் அந்த பையன்.. சிக்கல்ல மாட்டிகிட்டாரு – ஹர்பஜன் சிங் பேட்டி
என் வாழ்க்கையில் சிக்கல்கள் வந்த போது தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டே இருந்தேன். எவ்வளவு கடினமாக உழைத்தாலும் ஒரு கதையை நானாக எழுத முடியாது என்று உணர்கிறேன். அதற்குப் பிறகு என் வாழ்க்கை மாறியது. டி20 உலக கோப்பையை வென்று திரும்பி வந்த எனது ஆறு மாத காலகட்டம் என் வாழ்க்கையில் 360 டிகிரி முற்றிலும் திருப்பமாக அமைந்தது என்று நினைக்கிறேன்” என ஹர்திக் பாண்டியா பேசியிருக்கிறார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு பாண்டியா கேப்டனாக இருக்கும் நிலையில் அவரை வரவேற்க மும்பை ரசிகர்கள் பெரும் அளவில் தயாராகி வருகிறார்கள்.






