“நீங்கள் அந்த ஆல்ரவுண்டர் போல ஆகிவிட்டிர்களா?” – ஹர்திக் பாண்ட்யா மாஸ் பதில்!

0
102
Hardik pandya

ஒரு துறையில் ஏற்படும் சரிவுகளில் இருந்து மீண்டு வந்தால் இப்படி வரவேண்டும் என்று சொல்லுமளவிற்குத் திரும்பி வந்து அசத்திக் கொண்டிருக்கிறார் ஹர்திக் பாண்ட்யா. இது ஹர்திக் பாண்ட்யா 2.ஓ என்று சொல்லுமளவில் இருக்கிறது அவரது களச்செயல்பாடும், வேகமும், விவேகமும்!

முதுகு அறுவை சிகிச்சைக்குப் பிறகும், வழக்கமான ஷாட்ஸ்கள் ஆட முடியாமலும், இயல்பாய் பந்துவீச முடியாமலும் பெரிதும் சிரமப்பட்டார் ஹர்திக் பாண்ட்யா. பின்பு அவரே தன்னிலை உணர்ந்து, இந்திய அணியில் தன்னை தேர்வு செய்ய வேண்டாமென கேட்டுக்கொண்டு, உடற்தகதியை மேம்படுத்த சென்றார்!

- Advertisement -

உடற்தகுதியில் கவனம் செலுத்தி தேறி, ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு அவர் கேப்டனாய் வந்தபொழுது, வேறு ஒரு ரூபத்தில் இருந்தார். அவரிடம் இருந்த பழைய வேகத்தில் விவேகமும் கலந்திருந்தது. ஒரு பவுலராக, பேட்ஸ்மேனாக முன்னின்று ஒரு கேப்டனாக முன் உதாரணமாக இருந்தார். பேட்டிங்கில் அதிரடி பினிசராக பாத்திரம் வகித்து வந்து ஹர்திக் பாண்ட்யா, ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் ஒரு தேர்ந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக அற்புதமாக விளையாடினார். அவர் இன்னிங்சை கட்டமைத்த விதத்திலும், அவர் ஷாட்ஸ் தேர்வும் அவ்வளவு முதிர்ச்சியாகவும், புத்திசாலித்தனமாகவும் இருந்தது!

இதெல்லாம் அவரை அயர்லாந்து அணியுடனான டி20 தொடருக்கு இந்திய அணியின் கேப்டனும் ஆக்கியது. அறுவை சிகிச்சைக்குப் பின் பந்துவீச முடியாமல் அவதிப்பட்ட அவர் தற்போது அனுபவித்து மிகச்சிறப்பாகப் பந்துவீசி வருகிறார். இங்கிலாந்து அணியுடன் நடந்த டி20, ஒருநாள் தொடர்களில் தனது சிறந்த பந்துவீச்சை 4/33, 4/ 24 என்று கொண்டுவந்தார். வெஸ்ட்இன்டீஸ் டி20 தொடரிலும் அவரது பந்துவீச்சு மிகச்சிறப்பாகவே இருக்கிறது. நேற்றைய போட்டியிலும் முதல் விக்கெட்டை ஹர்திக்தான் வீழ்த்தினார். மிடில் ஓவர்களில் வெஸ்ட்இன்டீஸ் அணி ரன் அடிக்க பெரிய முட்டுக்கட்டையாக ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சு இருந்தது!

ஹர்திக் பாண்ட்யா தனது ஆரம்பத்தில், ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ் தென் ஆப்பிரிக்காவுக்கு செய்ததைப் போல நான் இந்தியாவுக்குச் செய்ய விரும்புகிறேன் என்று கூறியிருந்தார். இதை ஞாபகத்தில் வைத்த நேற்று பத்திரிக்கையாளர் ஒருவர் “நீங்கள் தற்போது இந்தியாவின் ஜாக் காலிஸ் ஆகிவிட்டிர்களா?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

- Advertisement -

இதற்கு ஹர்திக் பாண்ட்யா மாஸ் பதில் ஒன்றை கூறியிருக்கிறார். அதில் அவர் “அதை நீங்கள் சொல்லலாம் ஸார். எனக்குத் தெரியாது. என் பெயர் ஹர்திக். நான் இன்னொருவராக மாறவேண்டிய அவசியம் இல்லை. நான் என்னால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்கிறேன். இப்போது என்னால் செய்ய முடிவதை வேறு யாராலும் இந்திய அணிக்குச் செய்ய முடியவில்லை என்றால், நான் இந்திய அணியின் ஆல்ரவுண்டராக மாறி இருக்கலாம்” என்று கூறியிருக்கிறார்!