இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.
தொடரானது வெற்றி தோல்வி இன்றி இரு அணிகளுக்கும் சரி சமமாக முடிவடைந்திருக்கும் நிலையில், இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகனின் கருத்துக்கு ஹர்பஜன்சிங் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்.
மைக்கேல் வாகன் விமர்சனம்
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதால் இந்திய அணி இங்கிலாந்தில் தொடரை இழக்கும் என்ற கருத்து பரவலாக நிலவியது. மேலும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் இந்த டெஸ்ட் தொடர் 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என்று கூறியிருந்தார்.
ஆனால் தோல்வியடையும் நிலையில் இருந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து டெஸ்ட் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்ய வைத்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் இந்திய அணியை விமர்சனம் செய்வதற்கு முன்பாக இங்கிலாந்து கிரிக்கெட் தற்போது எந்த நிலையில் உள்ளது என்று மைக்கேல் வாகன் பார்க்க வேண்டும் என ஹர்பஜன்சிங் கூறி இருக்கிறார்.
ஹர்பஜன் சிங் பதிலடி
இதுகுறித்து அவர் கூறும் போது “இந்தியாவிற்கு ஒரு பெரிய வெற்றி மறைந்திருப்பதாக நான் உணர்கிறேன். ஆம் ஸ்கோர் லைன் 2-2 என்ற கணக்கில் காட்டுகிறது. மைக்கேல் வாகன் மற்றும் பலர் 3-1 அல்லது 3-0 என்ற கணக்கில் கணித்திருந்தார்கள். நான் தற்போது அவர்களிடம் தங்கள் பக்கத்தையும் இங்கிலாந்து கிரிக்கெட் எந்த இடத்தில் இருக்கிறது என்று பார்க்கச் சொல்வேன். நமது கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணியின் நிலையை காட்டி இருக்கின்றனர்.
இதையும் படிங்க:உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்.. ஒரே வெற்றியால் கிடுகிடுவென உயர்ந்த இந்தியா.. முழு விவரம்
நம்ப முடியாத டெஸ்ட் போட்டியும் இந்திய அணி தொடரை விளையாடிய விதமும் பாராட்டுக்குரியது. இந்த அணி இங்கிலாந்து சென்றபோது மூத்த வீரர்கள் அணியில் இல்லை இது மிகவும் இளம் அணி என்று பலர் கூறினார்கள். ஆனால் இளம் அணி எப்படி வரலாற்றை உருவாக்கி இருக்கிறது என்று பாருங்கள்” என்று ஹர்பஜன் சிங் பேசியிருக்கிறார்.






