பிளே ஆப் சுற்றில் ஒரு காலை வைத்த குஜராத் டைட்டன்ஸ் ; ராஜஸ்தான் ராயல்சை நொறுக்கிய ஆப்கானிஸ்தான் ஸ்பின் பார்ட்னர்ஸ்!

0
1515
Gujarat

ஐபிஎல் 16 வது சீசனின் 48வது போட்டியில் ராஜஸ்தான் ஜெய்ப்பூர் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். பட்லர் 8, ஜெய்ஸ்வால் 14 ரன்களில் வெளியேறினாலும், கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியான ஆட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் தேவையில்லாமல் ஒரு ஷாட்டுக்கு போய் 20 பந்தில் மூன்று பவுண்டரி ஒரு சிக்சர் என 30 ரன்கள் எடுத்து அவர் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதற்கு பிறகு அப்படியே ராஜஸ்தான் அணியின் பேட்டிங் யூனிட் சரிந்தது. படிக்கல் 12, அஸ்வின் 2, ரியான் பராக் 4, ஹெட்மேயர் 7, ஜுரல் 9, போல்ட் 15, ஆடம் ஜாம்பா 7, சந்திப் சர்மா 2* ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்கள் எடுத்தது.

குஜராத் அணியின் தரப்பில் மிகச் சிறப்பாக பந்து வீசிய ஆப்கானிஸ்தான் ஸ்பின் ஜோடியான ரஷித் கான் நான்கு ஓவர்களுக்கு 14 ரன்கள் தந்து மூன்று விக்கெட்டுகளையும், நூர் அகமது மூன்று ஓவர்களில் 25 ரன்கள் தந்து இரண்டு விக்கட்டுகளையும் கைப்பற்றி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சரித்தார்கள்.

இதற்குப் பிறகு எளிமையான இலக்கை நோக்கி களம் இறங்கி விளையாடிய குஜராத் அணிக்கு சுக்மன் கில் 35 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவரது விக்கட்டை சாகல் பறித்தார்.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 13.5 ஓவர்களில் இலக்கை எட்டி ஒன்பது விக்கெட் அபார வெற்றி பெற்றது. சஹா 41 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில் 39 ரன்களிலும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்கள்.

மொத்தம் பத்து போட்டிகளில் விளையாடி உள்ள குஜராத் அணிக்கு இது ஏழாவது வெற்றியாகும். இதன் மூலம் 14 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. இன்னும் நான்கு ஆட்டங்கள் எஞ்சி இருப்பதால் ஏறக்குறைய பிளே ஆப் சுற்றில் குஜராத் ஒரு காலை வைத்துவிட்டது என்று கூறலாம். மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பின்னடைவை சந்தித்து இருக்கிறது. பத்து ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 10 புள்ளிகள் உடன் இருக்கிறது!