அச்சு அசல் ஐபிஎல் தொடர் போலவே போலியாக நடத்தி சூதாட்டம் ; குஜராத்தில் நூதன மோசடி – போலீஸார் கைது

0
108
Fake IPL in gujarat

இன்று உலகின் நம்பர் 1 உரிமையாளர்கள் டி20 கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐ.பி.எல் தான். வீரர்களுக்கான சம்பளம், பயிற்சி வசதிகள், தங்கும் வசதிகள், பாதுகாப்பு என எல்லாவற்றிலும் மிக உயர்ந்த அளவில் நடத்தப்படுகிறது!

இந்திய கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் துல்லியமாகக் கணக்கிட்டு பகுத்தறிந்து பிரித்துப் பார்க்க வேண்டுமென்றால் ஐ.பி.எல் தொடருக்கு முன், பின் என்றுதான் பிரித்துப் பார்க்க வேண்டும். இன்று இந்திய அணியின் மிக முக்கியமான வீரர்களாக இருக்கின்ற ஜஸ்ப்ரீட் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, அஷ்வின், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் ஐ.பி.எல் தொடரிலிருந்துதான் பெரிதாய் கவனம் ஈர்த்தார்கள். இதன் மூலமே அவர்களின் இந்திய அணிக்கான வருகையும் வெளியானது. உலக கிரிக்கெட்டிலும், இந்திய கிரிக்கெட்டிலும் ஐ.பி.எல் ஒருசேர நன்மை, தீமையென இரண்டையுமே உருவாக்குவதாய், கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவிப்பார்கள்.

- Advertisement -

இப்படி கிரிக்கெட் உலகத்தில் மிக முக்கியமான தொடராக விளங்கக் கூடிய ஐ.பி.எல் தொடர் 2008ஆம் ஆண்டு ஆரம்பித்ததில் இருந்தது இன்று வரை சுமூகமாகவும், சுத்தமாகவும் மட்டுமே நடைபெற்று வந்துவிடவில்லை. ஐ.பி.எல் குழுவின் ஆரம்பத்தில் மிக முக்கியப் பொறுப்பில் இருந்த லலித் மோடி, ஐ.பி.எல் தொடரை வைத்து ஊழலில் ஈடுபட்டு, பின்பு இங்கிலாந்து ஓடிப்போனார். ஒருகட்டத்தில் தன் தப்புகளை அவர் ஒப்புக்கொள்ளவும் செய்திருக்கிறார்.

மேலும் இந்திய கிரிக்கெட்டில் 1999-2000 காலக்கட்டத்தில் மேட்ச் பிக்ஸிங் சூதாட்ட குற்றச்சாட்டுகள் எழும்பி, பெரியளவில் இந்திய கிரிக்கெட்டையே புரட்டிப்போட்டது. இதற்கு அடுத்து 2013ஆம் ஆண்டு சூதாட்டம், மோசடி, ஸ்பாட் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் ஐ.பி.எல் தொடரில் வந்து, பின்பு விசாரிக்கப்பட்டு, அஜித் சன்டிலா, ஸ்ரீசாந்த் போன்ற வீரர்களும், பாகிஸ்தான் அம்பயர் ஆசாத் ரவூப் மற்றும் ராஜஸ்தான், சென்னை அணிகள் தண்டிக்கப்பட்டன.

இப்பொழுது ஐ.பி.எல்-லை மையமாக வைத்து ஒரு நூதனமான சூதாட்டம் நடந்திருப்பது வெளிவந்து அதிர்ச்சியை மட்டுமல்லாது ஆச்சரியத்தையும் கிளப்பி இருக்கிறது. நடந்துள்ள இந்தச் சூதாட்டம் குறித்தான விபரங்களைப் பார்க்கும் போது, இப்படியெல்லாம் கூட ஏமாற்ற முடியுமா? இப்படியெல்லாம் கூட ஏமாற்றுவார்களா? என்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

- Advertisement -

ஐ.பி.எல் தொடரை வைத்து என்ன மாதிரியான சூதாட்டம் நடந்திருக்கிறது என்றால்; ஐ.பி.எல் தொடரைப் போன்று ஒரு போலியான ஐ.பி.எல் தொடரை குஜராத்தின் மொலிபுர் என்ற குக்கிராமத்தில் நடத்தி, அதை நேரலையாக யூடியூப்பில் ஒளிபரப்பி, ரஷ்ய சூதாட்டக்காரர்களை ஏமாற்றி இருக்கிறார்கள். இதற்காகத் தங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்களை சென்னை, மும்பை அணி வீரர்கள் போல காட்டி ஏமாற்றி இருக்கிறார்கள். இதற்கு நானூறு சம்பளம் கொடுத்திருக்கிறார்கள். மேலும் சூதாட்டக்காரர்களை ஏமாற்றுவதற்காக பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே குரலில் மிமிக்ரி செய்திருக்கிறார்கள் என்பதுதான் உச்சக்கட்ட ஆச்சரியம்!