டி20 உலகக் கோப்பையில் ஃபாப் டூ பிளசிஸ் விளையாட வாய்ப்பு இருக்கிறதா ? கிரேம் ஸ்மித் பதில்

0
132
Graeme Smith about Faf du Plessis

உலக கிரிக்கெட் நாடுகளில் தென் ஆப்பிரிக்கா உயர்தர கிரிக்கெட்டை கொடுக்கக் கூடிய அணி. அதேவேளையில் உலகக்கோப்பை என்றால் அரையிறுதியில் பதட்டமடைந்து தோற்பதை வழக்கமாக வைத்திருக்கும் அணி!

2000ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா அணி பெரிய எழுச்சியைப் பெற்ற காலத்திலும், அந்த அணிக்குச் சவால் அளிக்கக் கூடிய அணியாகவே தென் ஆப்பிரிக்க அணி இருந்தது. ஹெர்செலே கிப்ஸ், கேரி கிறிஸ்டன், ஆலன் டொனால்ட், ஷான் பொல்லாக், லான்ஸ் க்ளூஸ்னர், ஜான்டி ரோட்ஸ் என்று பல திறமையான வீரர்களைக் கொண்டிருந்தது.

இந்த வீரர்கள் வரிசையாக ஓய்வுபெற ஆரம்பிக்க தென் ஆப்பிரிக்க அணி ஒரு சிறு சறுக்கலுக்கு உள்ளானது. அப்போது உடனடியாக இளைஞர் கீரிம் ஸ்மித்தை கேப்டனாக கொண்டு வந்து, ஹசீம் ஆம்லா, ஏ.பி.டிவிலியர்ஸ், டேல் ஸ்டெயின், பிலாந்தர், மோர்னோ மோர்கல் போன்ற வீரர்களைக்கொண்டு வலிமையான அணியாக மீண்டெழுந்தது.

பின்பு இந்த வீரர்கள் ஒவ்வொருவராக வெளியேற தென் ஆப்பிரிக்க அணி மீண்டும் சரிவை சந்தித்தது. க்ரேம் ஸ்மித்தை கிரிக்கெட் கவுன்சில் டைரக்டராகவும், மார்க் பவுச்சரை தலைமைப் பயிற்சியாளராகவும் கொண்டுவந்து, டீன் எல்கரை சிவப்புப் பந்து கிரிக்கெட்டிற்கும், டெம்பா பவுமாவை வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக அறிவித்து, மீண்டும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டை கட்டி எழுப்பி வருகிறார்கள்.

இந்த நிலையில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து, 2021 உலகக்கோப்பை தொடரில் கவனம் செலுத்த வேண்டுமென்று ஓய்வை அறிவித்த டூ பிளிசிஸ், அந்த உலகக்கோப்பை நடந்த யு.ஏ.இ மைதானங்களிலேயே சென்னை அணிக்காக 16 போட்டிகளில் 633 ரன்களை அடித்தும் தென் ஆப்பிரிக்க உலகக்கோப்பை டி20 அணியில் தேர்வாகவில்லை. தற்போதைய நிலையில் பாப் டூ பிளிசிஸ் மிகச்சிறப்பான பேட்டிங் பார்மில் இருக்கிறார் என்றே கூறலாம். இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரிலும் 16 ஆட்டங்களில் பெங்களூர் அணிக்காக 468 ரன்களை குவித்திருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டுவரை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் கவுன்சில் டைரக்டராக இருந்த க்ரேம் ஸ்மித் இதுபற்றி பேசியுள்ளார் அதில் “பாப் டூ பிளிசிஸ் மிகச் சிறந்த வீரர். அவர் நல்ல பார்மிலும் இருக்கிறார். ஆனால் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் ஒப்பந்தத்தில் இல்லாத அவர் பல நாட்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறார். அவருக்கு தேசிய அணிக்காக நேரம் ஒதுக்க எப்படி முடியும் என்று தெரியவில்லை. இப்படியான வீரர்களை அணிக்குள் கொண்டு வருவதில் இந்தியா தவிர மற்ற எல்லா கிரிக்கெட் நாடுகளுக்குமே பிரச்சினை உள்ளது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் ஒரு சமபலம் வாய்ந்த அணியை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கடந்த ஆண்டு போலவே ஒப்பந்தத்தில் இல்லாத வீரர்கள் விசயத்தில் நடந்துகொள்ள போகிறார்களா? இல்லை புதிதாக ஏதாவது செய்யப் போகிறார்களா என்று பார்க்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்!