“இந்தியாவுல நல்ல ஃபாஸ்ட் பவுலர்ஸ் வந்துட்டாங்க.. காரணம் இதை சாப்பிடறதாலதான்!” – ஷாஹித் அப்ரிடி அதிரடியான கருத்து!

0
4325
Afridi

பொதுவாக உலகக் கிரிக்கெட்டில் வேகப்பந்துவீச்சாளர்கள் என்றால் ஆரம்பத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா என இரண்டு நாடுகள் மிகப்பெரிய அளவில் கோலோச்சி வந்தது!

இதற்கு அடுத்து உலகக்கிரிக்கெட்டில் பொதுவாகவே வேகப்பந்து வீச்சுத்துறை என்றால், அதற்கான தொழிற்சாலையாகவே ஆசியாவின் பாகிஸ்தான் இருந்து வருகிறது. இன்றளவிலும் இந்த விஷயத்தில் அவர்களுடன் யாரும் போட்டி போட முடியாத நிலைதான் இருக்கின்றது. சாதாரண உள்நாட்டில் நடைபெறும் சிறு தொடர்களில் கூட அதிவேகமாக வீசும் சிறுவர்களை பாகிஸ்தானில் பார்க்க முடியும்.

- Advertisement -

இந்திய அணியை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் இந்த விஷயத்தில் எப்பொழுதுமே பின்தங்கிதான் இருந்தது. ஒரே ஒரு வேகப்பந்துவீச்சாளரை மட்டுமே வைத்து இந்திய அணி பலகாலம் நகர்ந்தது. இந்திய கிரிக்கெட்டில் வேகப்பந்துவீச்சாளர்களின் வருகை மிக தாமதமாகத்தான் நடந்தது.ஆனாலும் கூட அது நிலையான அந்தஸ்தை உருவாக்கவில்லை.

ஆனால் விராட் கோலியின் காலத்தில் இந்திய கிரிக்கெட்டில் வேகப்பந்துவீச்சத்துறை என்பது மிகவும் கூர்மையான ஒன்றாக மாறியது. வேகப்பந்து வீச்சுக்கு ஆட்கள் உடனுக்குடன் மாற்றாக கிடைத்துக் கொண்டே இருக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இதன் காரணமாகத்தான் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டை எந்த நாட்டிலும் வெல்லக்கூடிய அளவில் இருக்கிறது.

தற்பொழுது இதுகுறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி “இந்தியாவில் 1.4 பில்லியன் மக்கள் தொகை இருக்கிறது. அவர்களுடைய கிரிக்கெட் தரம் சில ஆண்டுகளில் மாறிவிட்டது. அவர்கள் சிறந்த பேட்ஸ்மேன்களை உருவாக்கி வருகிறார்கள் என்று சொல்லி வந்தோம்.

- Advertisement -

ஆனால் நாங்கள் விளையாடியது போல் தற்பொழுது இந்தியா கிடையாது. இந்தியா தற்பொழுது நல்ல பேட்ஸ்மேன்கள் நல்ல வேகப்பந்துவீச்சாளர்கள் என இரண்டையும் உருவாக்குகிறது. இதன் காரணமாக இந்தியா வலிமையாக மாறியிருக்கிறது. அவர்களின் பந்துவீச்சாளர்கள் இப்பொழுது இறைச்சி உண்ண ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் நல்ல உடல் வலிமை பெற்று இருக்கிறார்கள்.

முதலில் சவுரவ் கங்குலி தனது கேப்டன்ஷியில் பல மாற்றங்களை கொண்டு வந்தார். பின்னர் மகேந்திர சிங் தோனி மூத்த வீரர்களையும் அழைத்துச் சென்ற விதம் சிறப்பாக இருந்தது. பிசிசிஐ சரியான இடத்தில் முதலீடு செய்தது.

அவர்கள் ஒரு இளம் வீரருக்கு உள்நாட்டு கிரிக்கெட்டை மொத்தமாக கொடுத்து அதில் இருந்து தயார்படுத்துகிறார்கள். ராகுல் டிராவிட் இளம்வீரர்கள் எப்படி அடிப்படையில் இருந்து உச்சத்தை தொட வேண்டும் என்பதை மிகவும் அறிந்தவர்.

அவர்கள் கடினமாக உழைத்து திறமைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா விரும்பினால் இப்பொழுது அவர்களால் இரண்டு அணிகளை உருவாக்க முடியும். அவர்கள் சரியான இடத்தில் முதலீடு செய்தார்கள். இப்போது அவர்களது மக்கள் பந்துவீச்சில் கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் சரியான முகாம்களை கட்டினார்கள் திறமை வெளி வருகிறது!” என்று கூறி இருக்கிறார்!