ஆப்கான் கிரிக்கெட் வரலாற்றில் பொன்னாள்.. நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தியது.. உலக கோப்பையில் மாபெரும் வெற்றி!

0
480
Afghanistan

இன்று 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் டெல்லி மைதானத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தப் போட்டியிலும் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் இடம் பெறவில்லை.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக வந்த இப்ராகிம் ஜட்ரன் மற்றும் குர்பாஸ் இருவரும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்துக்கு ஆச்சரியம் அளித்தார்கள்.

இந்த ஜோடி 16.4 ஓவர்களில் முதல் விக்கட்டுக்கு 114 ரன்கள் எடுத்து பிரிந்தது. இப்ராகிம் ஜட்ரன் 48 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து ரஹமத் ஷா மூன்று ரன்கள் ஆட்டம் இழந்தார்.

இந்த நிலையில் மிகச் சிறப்பாக அதிரடியாக விளையாடிய குர்பாஸ் 57 பந்துகளில் 80 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

- Advertisement -

மேலும் கேப்டன் ஹஸமத்துல்லா ஷாகிதி 14, ஓமர்சாய் 19, முகமது நபி 9 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். இதற்கடுத்து ரசீத் கான் 23, முஜீப் 28, நவீன் உல் ஹக் 5, பரூக்கி 2* ரன்கள் எடுத்தார்கள். இன்று ஆப்கானிஸ்தான் அணிக்காக அறிமுகப் போட்டியில் களம் இறங்கிய இக்ரம் அலிகில் 66 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார்.

ஆப்கானிஸ்தான அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணிக்காக ஆதில் ரசீத் மூன்று விக்கெட்டுகள், மார்க் வுட் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு பேர்ஸ்டோ 2, டேவிட் மலான் 32, ஜோ ரூட் 11, ஜோஸ் பட்லர் 9, லிவிங்ஸ்டன் 10 சாம் கரன் 10, கிறிஸ் வோக்ஸ் 9 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதற்கிடையில் ஹரி ப்ரூக் 61 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

ஆதில் ரசீத் மற்றும் மார்க் வுட் இணைந்து ஒரு சிறிய பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தினார்கள். ஆனால் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் அவர்களை விடவில்லை. ஆதில் ரஷீத் 20 ரன்களில் ரஷித் கான் பந்தில் ஆட்டம் இழந்தார். கடைசி விக்கெட்டாக மார்க் வுட்டையும் 18 ரஷித் கான் ரன்களில் வீழ்த்த, இங்கிலாந்து அணி 215 ரன்கள் ஆல் அவுட் ஆனது.

இதை அடுத்து ஆப்கானிஸ்தான அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு உலக சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி மிகப்பெரிய ஆச்சரியத்தை எல்லோருக்கும் கொடுத்தது. முஜீப் மற்றும் ரஷித் கான் தலா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். நபி இரண்டு விக்கெட் கைப்பற்றி அசத்தினார்!

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான அணி முதல் வெற்றியைப் பெற்றிருந்தது. இன்று நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் பெற்று இருக்கிறது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் இது ஒரு பொன்னாள்!