கில் – ஜெய்ஸ்வால் சாதனை பார்ட்னர்ஷிப்.. வெஸ்ட் இண்டீஸை புரட்டி எடுத்த இந்தியா அபார வெற்றி!

0
2083
Jaiswal

இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் தற்பொழுது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது!

இதில் முதல் மூன்று போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்றன. இதில் இரண்டு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. ஒரு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் அடுத்த இரண்டு போட்டிகள் தற்பொழுது அமெரிக்காவில் நடைபெறுகின்றன.

- Advertisement -

இன்று அமெரிக்காவில் நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பிரண்டன் கிங் 18 மற்றும் கைய்ல் மேயர்ஸ் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். அடுத்து அபாயகரமான வீரர் நிக்கோலஸ் பூரன் இந்த முறை ஒரு ரன்னில் குல்தீப் பந்தில் ஆட்டம் இழந்தார்.

இந்த முறை சார்லசுக்கு பதிலாக இடம் பெற்ற சாய் ஹோப் தனக்கு கிடைத்த வாய்ப்பில் மிகச் சிறப்பாக விளையாடி 29 பந்துகளில் மூன்று பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 45 ரன்கள் எடுத்தார். அணிக்குத் தேவையான நேரத்தில் சிம்ரன் ஹெட்மையர் 39 பந்துகளில் மூன்று பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 61 ரன்கள் எடுத்தார்.

கேப்டன் ரோமன் பவல் 1, ரோமாரியோ ஷெப்பர்ட் 9, ஜேசன் ஹோல்டர் 3, ஓடியன் ஸ்மித் 15, அகேல் ஹுசைன் 5 ரன்கள் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்தது. இந்தியா தரப்பில் அர்ஸ்தீப் 3, குல்தீப் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து வென்றால் மட்டுமே தொடரில் நீடிக்க முடியும் என்ற நிலையில் இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் கில் இருவரும் களமிறங்கினார்கள். இந்த டி20 தொடர் முழுக்க இந்திய துவக்க ஆட்டம் சரியில்லாததற்கு, இந்தப் போட்டியில் இந்த ஜோடி வட்டியும் முதலுமாக பதிலடி கொடுத்தது.

இருவரும் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை நாலாபுறங்களிலும் சிதறடித்து இந்திய அணிக்கு ரன்களை மிக வேகமாக கொண்டு வந்தார்கள். சிறப்பாக விளையாடிய கில் 30 பந்தில் அரை சதம் அடிக்க, ஜெய்ஸ்வால் 32 பந்தில் அரை சதம் அடிக்க, இந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

தொடர்ந்து விளையாடிய இந்த ஜோடி 150 ரன்களை தாண்டியது. இந்த நிலையில் அணி 165 ரன்கள் எடுத்திருந்த பொழுது சிறப்பாக விளையாடிய கில் 47 பந்துகளில் மூன்று பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் 77 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவர்கள் அமைத்த துவக்க ஜோடி பார்ட்னர்ஷிப் இந்தியாவுக்கான அதிகபட்ச டி20 துவக்க ஜோடி பார்ட்னர்ஷிப்பாக பதிவாகி இருக்கிறது. இதற்கு முன்பு ரோஹித் சர்மா மற்றும் கே எல் ராகுல் இருவரும் இதே 165 ரன்னை இலங்கைக்கு எதிராக எடுத்திருக்கிறார்கள். இந்த ஜோடி கொஞ்சம் குறைவான பந்துகளை எடுத்துக் கொண்டதால் இது முதல் இடத்தில் நீடிக்கிறது.

இதற்கு அடுத்து திலக் வர்மா களம் இறங்க மேற்கொண்டு விக்கெட்டுகள் எதுவும் விழாமல் இந்திய அணி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 17 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. ஒரு முனையில் ஜெய்ஷ்வால் ஆட்டம் இழக்காமல் 51 பந்தில் 11 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 84 ரன்கள் உடனும், திலக் வர்மா 5 பந்துகளில் 7 ரன்கள் உடனும் களத்தில் இருந்தார்கள்.

இந்த அபார வெற்றியின் மூலம் தற்பொழுது தொடர் இரண்டுக்கு இரண்டு என சம நிலையில் உள்ளது. தொடரை முடிவு செய்யும் ஐந்தாவது போட்டி நாளை இதே மைதானத்தில் நடைபெற இருக்கிறது.