ருதுராஜ் ஃபீல்டிங்கை தொடர்ந்து கவாஸ்கர் மற்றும் ஒரு சர்ச்சை பேச்சு!

0
1024
Gavaskar

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு வருடங்களுக்குப் பிறகு திரும்பி வந்த ஆட்டம் லக்னோ அணிக்கு எதிராக நடந்தது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது!

இந்த போட்டியில் முதலில் டாசை இழந்து பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் மற்றும் கான்வே இருவரும் மிகப் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து களம் கண்ட லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் மிகச் சிறப்பான தாக்குதலை தொடுத்து முதல் ஆறு ஓவர்களில் 80 ரன்கள் குவித்தது. ஆனால் அதற்குப் பிறகு ஆட்ட சூழ்நிலையையும் ஆடுகள நிலைமையும் புரிந்து கொள்ளாமல் விளையாடி சொற்ப ரன்னான 12 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

இந்தப் போட்டியின் போது முக்கியமான 19ஆவது ஓவரை ஹங்கர்கேகர் வீசிய பந்து ஒன்றை லக்னோ இளம் வீரர் பதோனி ரிவர்ஸ் ஸ்கூப் விளையாடினார். பந்து எப்படியும் பௌண்டரிதான் ஆகப் போகிறது என்கின்ற மாதிரிதான் இருந்தது. ஆனால் தேர்ட் மேன் திசையில் இருந்து வந்த ருதுராஜ் அபாரமாக பாய்ந்து பிடித்து தடுத்து கீப்பருக்கு பந்தை அடித்தார். லக்னோ அணியால் அப்பொழுது ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

ருதுராஜின் இந்த அபாரமான ஃபீல்டிங்கின் போது பந்து அவர் பின்புறம் வைத்திருந்த டவலின் மீது பட்டது. இதற்கு ஆங்கில கமெண்டரியில் இருந்த கவாஸ்கர் பெனால்டி ரன்னாக ஐந்து ரன்கள் லக்னோ அணிக்கு தரவேண்டும் இது தவறான ஃபீல்டிங் என்று கூறினார்.

- Advertisement -

கிரிக்கெட் விதியில் இதற்கு பெனால்டி ரன் உண்டா என்று கேட்டால் உண்மையில் கிடையாது. ஏனென்றால் தொப்பி, டவல் போன்ற விஷயங்களில் பந்து தாமாகப்பட்டால் பெனால்டி கிடையாது. மாறாக ஒரு வீரர் இந்த பொருட்களை வைத்து பந்தை வேண்டுமென்றே தடுத்து இருந்தால் மட்டுமே பெனால்டி ரன் வழங்கப்படும். இந்த விதியே தெரியாமல் நேற்று கவாஸ்கர் பேசியது சமூக வலைதளங்களில் விவாதமானது.

இது இல்லாமல் நேற்று 17வது ஓவரை வீசிய சென்னை அணையின் தீபக் சகர் தொடர்ந்து மூன்று வைடுகளை வீசினார். அப்பொழுது கமெண்டரியில் இருந்த கவாஸ்கர் இப்படி இரண்டு வைடுகளை தொடர்ந்து வீசினால் அடுத்த பந்தை ஃப்ரீ ஹிட் ஆக அறிவிக்க வேண்டும் என்று தனது கருத்தை தெரிவித்தார்.

ஏற்கனவே கிரிக்கெட் போட்டி என்பது பேட்ஸ்மேன்களின் போட்டியாக மட்டுமே இருக்கும் பொழுது இப்படியான விதிகள் பந்துவீச்சாளர்களை இன்னும் நெருக்கடிக்குள் தள்ளும். அதே சமயத்தில் இரண்டு பந்துகளை பேட்ஸ்மேன் விளையாடாமல் விட்டால், அதற்காக பெனால்டி ரன்களோ அல்லது விக்கெடோ யாரும் எதிர்பார்ப்பது இல்லை.

இப்படி தொடர்ந்து புதிய விதிகள் என்று பந்துவீச்சாளர்கள் மேல் போய்க் கொண்டே இருந்தால் கிரிக்கெட் அதன் உண்மை நிறத்தை இழந்து வேறொன்றாகத்தான் இருக்கும். கிரிக்கெட் ரசிகர்கள் உண்மையான கிரிக்கெட் காணக் கிடைக்காமல் கிரிக்கெட் பெயரில் வேறு ஏதோ ஒன்றைத்தான் பார்க்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கவாஸ்கர் மீது கடுமையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.