முதல் டி20ஐ போட்டியில் தினேஷ் கார்த்திக்கு இடம் கொடுத்திருக்க கூடாது ; பதிலாக இவர் ஆடியிருக்க வேண்டும் – கம்பீர் கருத்து

0
244
Gautham Gambhir about Dinesh Karthik

ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட டெம்பா பவுமா தலைமையில் இந்தியா வந்துள்ளது தென் ஆப்பிரிக்க அணி. இந்தத் தொடரின் முதல் ஆட்டம் கடந்த 9ஆம் தேதி பகல் இரவு ஆட்டமாக டெல்லியின் பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் பீல்டிங்கை தேர்வு செய்ய, இந்திய பேட்டர்கள் தைரியமான அணுகுமுறையில் மிகச்சிறப்பாகவே விளையாடினார்கள். இதனால் இந்திய அணி இருபது ஓவரின் முடிவில் 211 ரன்களை குவித்தது.

அடுத்து 212 என்ற இலக்கோடு களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணியும் தைரியமாகவே ஆடியது. 81 ரன்களின் போது குயின்டன் டிகாக் மூன்றாவது விக்கெட்டாய் வெளியேறும் போது வெற்றி இந்திய அணியின் பக்கமே இருந்தது. ஆனால் டேவிட் மில்லர், வான்டர் டூ டெசன் ஜோடி 131 ரன்கள் கூட்டணியாய் விளாசி, இந்திய அணிக்குத் தோல்வியைப் பரிசளித்தனர்.

இந்த ஆட்டத்தில் இந்திய பேட்டர்கள் 211 ரன்களை குவித்திருந்துமே புவனேஷ்வர் குமார், ஹர்சல், யுஸ்வேந்திர சாஹலால் தென் ஆப்பிரிக்க அணியை இந்த ரன்களுக்குள் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்று இரண்டு பந்துகளில் ஒரு ரன் அடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது இது குறித்துப் பேசியுள்ள இந்திய அணியின் பிரபல முன்னாள் விரரும், ஐ.பி.எல் லக்னோ ஜெயன்ட்ஸ் அணியின் மென்டரான கவுதம் கம்பீர், அதில் “இப்போது நீங்கள் தினேஷ் கார்த்திக்கை வைத்து முதல் ஆட்டத்தில் ஆடிவிட்டிர்கள். எனவே இரண்டாவது ஆட்டத்திலும் அவரேதான் இருப்பார். ஆனால் தினேஷ் கார்த்திக்கிற்குப் பிறகு தீபக் ஹூடாவை அணியில் எடுத்திருக்க வேண்டும். அவர் சிறந்த பார்மில் இருந்ததோடு, இளைஞராகவும் இருக்கிறார். அடுத்த ஆட்டத்தில் எந்த மாற்றமும் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் ஆடுகளம் மிக வறண்டதாய் இருந்தால் முடிவை மாற்ற வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் பேசிய அவர் “தேவைப்பட்டால் ஒரு வேகப்பந்து வீச்சாளரை வெளியில் உட்கார வைத்துவிட்டு ஸ்பின்னர் ரவி பிஷ்னோயை எடுக்கலாம். ஹர்திக் பாண்ட்யா மூன்றாவது பாஸ்ட் பவுலராக இருக்கலாம். இப்படி இரண்டு ரிஸ்ட் ஸ்பின்னர்களோடு போகலாம், ஒருவேளை மைதானம் சிறியதாகவோ, ஆடுகளம் சுழலுக்கு எடுபடாது என்றால் பழைய அணியையே தொடரலாம்” என்று தெரிவித்திருக்கிறார்!