இன்று ஐபிஎல் தொடரில் மிக முக்கியமான போட்டி ஒன்று நடைபெற இருக்கிறது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணியும் கேகேஆர் அணியும் மோதிக்கொள்ள இருக்கின்றன. ஆர்சிபி அணியில் வெளிப்படையாக விராட் கோலி விளையாட, கேகேஆர் அணிக்கு கவு தம் கம்பீர் மென்டராக இருக்கிறார். இவர்களுக்கு இடையே இருக்கும் ஐபிஎல் பஞ்சாயத்துக்கள் அனைவரும் அறிந்ததே. இதன் காரணமாக இன்றைய போட்டிக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இதே பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் கம்பீர ஆரம்பித்து வைத்ததை, கம்பீர் மென்டராக இருக்கும் லக்னோ அணியின் சொந்த மைதானத்தில் விராட் கோலி முடித்து வைத்தார். இவர்களுக்குள் தொடர்ந்து களத்தில் பிரச்சனைகள் வந்து கொண்டே இருப்பது இயல்பாகவே மாறி இருக்கிறது. எனவே இன்றைய போட்டியிலும் இவர்கள் இருவரும் ஏதாவது பஞ்சாயத்தில் ஈடுபடுவார்களா? என்பது ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது.
இன்றைய போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாக ரசிகர்களின் எதிர்பார்ப்பு இப்படி இருக்கும் போது, கேகேஆர் அணியின் சமூக வலைதள பக்கத்திலும், இவர்கள் இருவரையும் வைத்து பதிவு வந்து களத்தை சூடாக்கி இருக்கிறது. இதை இன்னும் தீவிரப் படுத்தும் விதமாக கவுதம் கம்பீரின் தற்போதைய பேட்டி ஒன்று அமைந்திருக்கிறது. அதில் அவர் வெளிப்படையாகவே ஆர்சிபி அணி பற்றிய தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.
கவுதம் கம்பீர் பேசும் பொழுது “நான் ஒவ்வொரு முறையும் வெளிப்படையாக கனவிலும் கூட தோற்கடிக்க நினைத்த அணி பெங்களூர் அணிதான். விராட் கோலி, கெயில், ஏபி டிவில்லியர்ஸ் என நட்சத்திர வீரர்களைக் கொண்டு மிகவும் ஆடம்பரமான அணியாக அவர்கள் தெரிந்தார்கள். அவர்கள் வெளிப்படையாக எந்த கோப்பையையும் வெல்லவில்லை என்றாலும் கூட, அவர்கள் எல்லாவற்றையும் வென்றதைப் போலவே நினைத்தார்கள். அவர்களின் இந்த ஆட்டிட்யூட் காரணமாகத்தான் அவர்களை எப்போதும் வெல்ல நினைத்தேன்.
கொல்கத்தா அணி இதுவரை அவர்களுக்கு எதிராக மூன்று சிறந்த வெற்றிகளை பெற்றிருக்கிறது. முதன் முதலில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மெக்கலம் அடித்த சதம், அடுத்து அவர்களை 49 ரன்களில் ஆல் அவுட் செய்தது, பிறகு கிரீஸ் லின் மற்றும் சுனில் நரைன் இருவரும் சேர்ந்து பெங்களூருக்கு எதிராக பவர் பிளேவில் 100 ரன்கள் அடித்தது என மூன்று சிறப்பான போட்டிகள் இருக்கிறது.
இதையும் படிங்க : அமெரிக்க டி20 அணியில் நியூசி நட்சத்திர வீரர்.. இந்திய வீரர் உன்முக்த் சந்த் உலககோப்பை கனவு முடிந்தது
மேலும் அவர்களிடம் மிகச் சிறந்த வலிமையான பேட்டிங் யூனிட் இருக்கிறது என்பதை நாங்கள் எப்பொழுதும் அறிந்தே இருக்கிறோம். என் வாழ்க்கையில் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால், நான் மீண்டும் விளையாடி பெங்களூரு அணியை தோற்கடிக்கவே விரும்புவேன்” என்றும் மிக வெளிப்படையாகவே கூறி களத்தை மீண்டும் சூடாக மாற்றியிருக்கிறார்.