இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் ஓய்வு எப்போது என்பது குறித்து கோச் கௌதம் கம்பீர் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
மண்ணை கவ்விய இந்தியா
சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கு முன்பாக இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் அதற்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் என இரண்டிலும் இந்திய அணி மோசமாக விளையாடி மண்ணை கவ்வியது. அதில் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் ஆன விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் ஆட்டம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் மற்றும் பேட்டிங் மிக மோசமாக இருக்க, மறுமுனையில் விராட் கோலி ஒரே மாதிரியாக ஆட்டம் இழந்து ரசிகர்களை வெறுப்படையச் செய்தார். இந்த சூழ்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த இருவரும் விரைவாக வெளியேற வேண்டிய காலம் வந்துவிட்டது என இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை கூறி வந்த நிலையில் கௌதம் கம்பீர் அவர்களது ஓய்வு குறித்து தற்போது மனம் திறந்து பேசி இருக்கிறார்.
இருவரின் ஓய்வு எப்போது?
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்திய அணியில் சிறப்பாக செயல்படும் வரை அவர்கள் இருவரும் அணியின் ஒரு பகுதியாக கட்டாயம் இருக்க வேண்டும். நீங்கள் எப்போது தொடங்குகிறீர்கள், எப்போது முடிக்கிறீர்கள் என்பதையெல்லாம் உங்கள் தனிப்பட்ட முடிவு. எந்த பயிற்சியாளரோ தேர்வாளரோ அல்லது பிசிசிஐயோ எப்போது ஓய்வு பெற வேண்டும் என்று சொல்ல முடியாது.
இதையும் படிங்க:ஐபிஎல் தொடரில் 3 முறை.. மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த இந்திய மிஸ்டர் 360.. MI vs GT.. ஐபிஎல் 2025
நீங்கள் சிறப்பாக செயல்பட்டால் ஏன் 40 முதல் 45 வயது வரை கூட ஜாலியாக விளையாட முடியும் யார் உங்களை தடுப்பது? அவர்கள் இருவரின் செயல் திறனை பற்றி நான் என்ன கூறுவது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர்கள் இருவரும் எப்படி செயல்பட்டார்கள் என்பதை உலகமே பார்த்தது. முதலாவதாக ஒரு பயிற்சியாளரின் வேலை அணியை தேர்ந்தெடுப்பது அல்ல. அணியை தேர்ந்தெடுப்பது என்பது தேர்வாளரின் வேலை. ஒரே போட்டியில் விளையாடும் 11 பேரை மட்டுமே பயிற்சியாளர் தேர்வு செய்கிறார். எனக்கு முன் பயிற்சியாளர்களாக இருந்தவர்கள் தேர்வாளராகவோ அல்லது நான் தேர்வாளராகவோ இருந்ததில்லை” என்று பேசி இருக்கிறார்.






