இன்று சிஎஸ்கே அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கேகேஆர் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணிக்கு வரலாற்று சோகத்தை மகேந்திர சிங் தோனி தடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.
சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சி இருக்கும் ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக வெளியேறினார். இதன் காரணமாக புதிய கேப்டனாக சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டார். இன்று அவர் கேகேஆர் அணிக்கு எதிராக கேப்டனாக செயல்பட இருக்கிறார்.
ருதுராஜின் கேப்டன்சி சொதப்பல்
இந்த சீசனில் தேர்வு செய்யப்பட்டுள்ள சிஎஸ்கே அணியின் பேட்டிங் யூனிட் மிகவும் மோசமானதாக அமைந்திருக்கிறது. இதன் காரணமாக அந்த அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து கொண்டு வருகிறது. மேலும் அணியின் மூன்றாவது ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு 9.75 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது நல்ல பேட்ஸ்மேன்களை வாங்க விடாமல் செய்திருக்கிறது.
இந்த நிலையில் கேப்டன்சி பொறுப்பில் ருதுராஜின் செயல்பாடும் மிகவும் சுமாராக இருந்திருக்கிறது. அவர் பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய விதம் எதிரணிக்கு பல நல்ல வாய்ப்புகளை உருவாக்கும் படி அமைந்தது. இந்த நிலையில் அவர் காயத்தால் வெளியேறி இருக்க தோனி புதிய கேப்டனாக உள்ளே வருகிறார்.
தோனிக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சவால்
சிஎஸ்கே அணி ஏற்கனவே தொடர்ந்து நான்கு போட்டிகளில் ரன்களை துரத்தும் பொழுது தோல்வி அடைந்திருக்கிறது. இந்த வகையில் சிஎஸ்கே அணியின் ஐபிஎல் வரலாற்றில் ரன்களை துரத்தும் போது தொடர் நான்கு தோல்விகளை முதன்முறையாக சந்தித்து புதிய மோசமான சாதனையை படைத்தது. இந்த நிலையில் இன்னொரு வரலாற்று சோகமான சாதனை காத்திருக்கிறது.
இதையும் படிங்க : தோனி திரும்ப கேப்டனாகி எந்த பயனும் இல்ல.. ஏற்கனவே சிஎஸ்கேவில் பல ஓட்டைகள் இருக்கு – ராபின் உத்தப்பா அதிரடி
சிஎஸ்கே அணி ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 5 போட்டிகளில் தொடர்ந்து தோற்றது கிடையாது. இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணி கேகேஆர் அணிக்கு எதிராக தோல்வி அடைந்தால், தன்னுடைய ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து ஐந்து தோல்விகளை முதல்முறையாக சந்தித்து புதிய மோசமான சாதனையை செய்யும். தற்பொழுது இதை தடுக்க வேண்டிய கட்டாயம் கேப்டன் தோனிக்கு முதல் போட்டியிலேயே ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது!






