பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் நடைபெற்ற டி டி20 உலக கோப்பையில் மோசமான தோல்வியை சந்தித்து தற்போது சொந்த மண்ணில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் தோல்வியடைந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சோயப் மாலிக் பாகிஸ்தான் அணிக்காக கிரிக்கெட் விளையாட விருப்பம் இல்லை என்றும், டி20 உலக கோப்பைக்கு முன்பாக வந்த வாய்ப்பை தான் நிராகரித்ததாகவும் கூறி இருக்கிறார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பேட்டிங், பந்து வீச்சு மற்றும் ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் வலுவான அணியாக காணப்பட்டாலும் அதனை சரியான நேரத்தில் செயல்படுத்துவதில் கோட்டை விடுகிறது. சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் மிக மோசமான தோல்வியை சந்தித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது. மேலும் சமீபத்தில் நடைபெற்று வரும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி முதல் சுற்றில் தோல்வியடைந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தானில் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்கள் தொடர்ந்து விளையாடுவதால் தான் டி20 உலக கோப்பைக்கு முன்பாக கிடைத்த தேர்வு குழு தலைவர் வாய்ப்பை நிராகரித்ததாக முன்னாள் வீரர் சோயப் மாலிக் கூறியிருக்கிறார். மேலும் தான் பாகிஸ்தான் அணிக்காக தொடர்ந்து விளையாடு விரும்பவில்லை எனவும் கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும் போது “2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக எனக்கு ஒரு ஆஃபர் கிடைத்தது. பாகிஸ்தான் அணியில் அப்போது தலைமை தேர்வாளர் இல்லை. மொத்த குழுவுக்கும் ஒரே அதிகாரம் மட்டுமே இருந்ததால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் நான் இன்னும் சில கிரிக்கெட் தொடர்களை விளையாடி வருகிறேன். நான் விளையாடிக் கொண்டிருக்கும்போது எப்படி வீரர்களை தேர்வு செய்வது? விளையாடும் போது தேர்வு குழுவில் அங்கம் வகிப்பது குறித்து எனக்கு புரியவில்லை.
தற்போது நான் ஒரு வடிவத்தில் மட்டுமே விளையாடி வருகிறேன். இன்னும் உள்நாட்டில் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாட முடியும் என்று நம்பிக்கை உள்ளது. இதன் மூலம் எனது அனுபவத்தை இளம் வீரர்களுடன் பகிர்ந்து கொள்ள என்னால் முடியும். பாகிஸ்தான் அணிக்காக விளையாடுவதில் எனக்கு ஆர்வம் இல்லை என்று ஏற்கனவே கூறியுள்ளேன். நான் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டேன்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் சூரிய குமாருக்கு ஏற்பட்ட சோகம்.. ருதுராஜுக்கு அடுத்தடுத்து நெருக்கடி.. துலீப் டிராபி நிலைமை என்ன?
அதனால் பாகிஸ்தான் டி20 அணியில் அங்கம் வகிக்க எனக்கு விருப்பமில்லை. உள்நாட்டு மட்டத்தில் நான் தொடர்ந்து விளையாடுவேன். ஓய்வு பெறும் முடிவை எடுக்க விரும்பினால் நான் ஒரே நேரத்தில் அனைத்தையும் விட்டு விலகி விடுவேன்” என்று கூறியிருக்கிறார்.