இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்துள்ள நிலையில் கடைசி மற்றும் சம்பிரதாயமான போட்டி வருகிற நவம்பர் 1ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று ஆறுதலாக தொடரையும் முடிக்க வேண்டிய உறுதியில் இந்திய அணி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான பாசித் அலி இந்திய அணி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சரிவு
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் டி20 உலக கோப்பையை வென்ற பிறகு ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பதவியில் இருந்து வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக கௌதம் கம்பீர் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றார். மேலும் டி20 உலகக் கோப்பைக்கு பிறகு கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இக்கட்டான சூழ்நிலைகளில் பெரிய ரன்கள் குவிக்கத் தவறி வருகின்றனர்.
இது இலங்கையில் நடைபெற்ற ஒரு நாள் தொடரிலும் இந்திய அணி தொடரை இழப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் முக்கிய தருணங்களில் இவர்கள் சரியாக விளையாடாமல் போனதே அணியின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான பாசித் அலி விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் ஆட்டம் டி20 உலக கோப்பைக்கு பிறகு மாற்றம் ஏற்பட்டிருப்பதாக கூறி இருக்கிறார்.
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் ஆட்டத்தில் மாற்றம்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவிற்கு டி20 உலக கோப்பைக்குப் பிறகு போட்டிகளில் கவனம் செலுத்துவதில் ஒரு சரிவு ஏற்பட்டிருக்கிறது. முன்பு போட்டிகளுக்கு முன்னதாக ஒரு முறையான பயிற்சிகள் இருந்தது. ஆனால் இப்போது விருப்பப்படி பயிற்சிகளில் பங்கேற்பது போன்று உணர்கிறேன். செறிவு குறைபாடுகள் இருக்கிறது. ஒரு போட்டியில் அவுட் ஆனால் அடுத்த போட்டியில் பெரிய ரன்கள் அடித்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.
இதையும் படிங்க:இந்திய அணிக்கு இனி ரஸல் நான்தான்.. அவரே எனக்கு தனியா இதையெல்லாம் செஞ்சிருக்கார் – ரமன்தீப் சிங் பேட்டி
ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை தலைக்கு மேலே தண்ணீர் சென்று விட்டது. பார்டர் கவாஸ்கர் டிராபியில் இருவரும் ரன்கள் அடிக்க வில்லை என்றால் அது இந்தியாவுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும்” என்று பாசித் அலி கூறியிருக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்ல வேண்டும் என்றால் இவர்கள் இருவரும் நிலைத்து நின்று மிகப்பெரிய ரன்கள் அடிக்க வேண்டும் என்பதே இந்திய அணியின் எதிர்பார்ப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.






