பாகிஸ்தான் அணி 16 மாதங்கள் கழித்து உள்நாட்டில் டெஸ்ட் தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளரான ஆஸ்திரேலியாவின் ஜேசன் கில்லெஸ்பிக்கு முக்கியமான அறிவுரை ஒன்றை கூறி இருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் தொடர்ந்து பெரிய தோல்விகளை சந்தித்து வருகிறது. ஐசிசி தொடர்களில் அந்த அணியின் செயல்பாடு விரும்பத்தக்க வகையில் இல்லை. ஐசிசி உலகக் கோப்பையை வென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
இதன் காரணமாக பாகிஸ்தான் வெள்ளைப் பந்து அணிகளுக்கு தென் ஆப்பிரிக்காவின் கேரி கிரிஸ்டின் மற்றும் பாகிஸ்தான் சிவப்புப் பந்து அணிக்கு ஆஸ்திரேலியாவின் ஜேசன் கில்லெஸ்பி ஆகியோரை புதிய தலைமை பயிற்சியாளர்களாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்திருக்கிறது.
மேலும் பாகிஸ்தான் வீரர்கள் ஒழுக்க கட்டுப்பாட்டுடன் செயல்படுவதற்காக, புதிய தலைமை பயிற்சியாளர்களுக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சரிந்திருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்டை நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நம்புகிறது. ஆகஸ்ட் 21ஆம் தேதி ராவல்பின்டி மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் முதல் டெஸ்ட் போட்டியில் மோதுகின்றன.
இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பசித் அலி கூறும் பொழுது ” பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிக் கொள்ளும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்களாதேஷ் அணியை மழை மட்டுமே காப்பாற்ற முடியும். பாகிஸ்தான் அணிக்கு உள்நாட்டில் நிறைய சாதகமான நிலைமைகள் இருக்கிறது. மேலும் பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணி பங்களாதேஷ் சென்றும் வெற்றி பெற்று இருக்கிறது.
இதையும் படிங்க : இங்கிலாந்து டெஸ்ட் சீரிஸ்.. ஜெயசூர்யாவுடன் கைகோர்க்கும் ஃபாரின் லெஜன்ட்.. இலங்கை மாஸ்டர் பிளான்
பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆஸ்திரேலியாவின் ஸ்டேஷன் கில்லெஸ்பியை சேர்த்து இருக்கிறது. அவர் ஆஸ்திரேலிய மனநிலையை பாகிஸ்தான் அணிக்குள் கொண்டு வந்து விளையாடுகிறாரா? என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் ஆஸ்திரேலிய மனநிலையை பாகிஸ்தான் அணிக்குள் அவர் புகுத்த நினைத்தால் அது தவறாகவே முடியும்” என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.






