இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணிகள் திடீரென மிகப் பெரிய சரிவை சந்தித்திருக்கின்றன. இதன் காரணமாக முக்கிய மாற்றம் ஒன்றை செய்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்திருக்கிறது.
2019 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை என இரண்டு பெரிய தொடர்களிலும் இங்கிலாந்து அணி வெள்ளை பந்து கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால் அதற்கு அடுத்த இரண்டு உலகக் கோப்பை தொடர்களையும் மிக மோசமான முறையில் தோற்று இருக்கிறது.
கம்பீர் ஸ்டைலில் பிரண்டன் மெக்கலம்
இந்த நிலையில் நீக்கப்படுவதற்கு முன்பாகவே இங்கிலாந்து வெள்ளை பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த மேத்யூ மோட்ஸ் பதவியை ராஜினாமா செய்து வெளியேறியிருக்கிறார். மேலும் ஜோஸ் பட்லர் கேப்டன் பதவியும் சிக்கலில் இருந்தது. ஆனால் அவருக்கு கடைசி வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
இங்கிலாந்து அணி அடுத்து ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக உள்நாட்டில் விளையாடுகிறது. இந்த தொடருக்கு தற்காலிக இங்கிலாந்து பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் வீரர் மார்க்கோ டிரெஸ்கோதிக் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இந்தத் தொடர்களுக்குப் பிறகு இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணிகளின் புதிய தலைமை பயிற்சியாளராக, இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் மெக்கலம் நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும் கம்பீர் போல் இவர் மூன்று வடிவத்திற்கும் இங்கிலாந்து அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருப்பார். இருவருமே ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து தேசிய அணிக்கு பயிற்சியாளர் ஆனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் முதல் சவால்
2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பாகிஸ்தானில் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கு தயாராகும் விதமாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இதையும் படிங்க : ஆஸ்திரேலியா ஸ்காட்லாந்து டி20.. எப்போது எந்த சேனல்.?. வரலாற்று தொடரால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வம்
இங்கிலாந்து வெள்ளை பந்து அணிகளின் புதிய தலைமை பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் பிரண்டன் மெக்கலம் இந்தத் தொடரில் இருந்து தனது பொறுப்பை எடுத்துக் கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய முதல் தொடரில் கம்பீர் அணிக்கு எதிராக மோதுகிறார்!