இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் தீப் தாஸ்குப்தா ஆஸ்திரேலியா நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்திடம் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து ஒரு முக்கியமான கேள்வியை கேட்டதாக கூறியிருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவில் நவம்பர் 22ஆம் தேதி முதல் மோதிக்கொள்ள இருக்கின்றன. கடந்த பத்து வருடங்களாக பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இந்திய அணியின் வசம் இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த முறை ஆஸ்திரேலியா மிக கடுமையாக தொடரை கைப்பற்ற போராடும் என்பதில் சந்தேகம் இல்லை.
டேவிட் வார்னர் ஓய்வுக்கு பிறகான மாற்றம்
டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவருடைய துவக்க இடம் ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியில் காலியாகவே இருக்கிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அதற்காக ஒரு புதிய வீரரை முயற்சி செய்யாமல் ஸ்டீவ் ஸ்மித்தை துவக்க வீரராக அனுப்பி வருகிறது. இதன் மூலம் மிட்சல் மார்ஸ் மற்றும் கேமரூன் கிரீன் இருவரையும் பிளேயிங் லெவனில் வைக்க திட்டமிடுகிறது.
அதே சமயத்தில் துவக்க வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அனுப்பப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் மொத்தம் 8 இன்னிங்ஸ்கள் விளையாடி 171 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய சாதனைகளை செய்திருக்கும் அவரை ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் வீணடிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் இருக்கிறது.
ஸ்மித்கிட்ட நேரா கேட்டேன்
இதுகுறித்து தீப் தாஸ்குப்தா கூறும் பொழுது “நீங்கள் ஒரு இந்தியராக இருந்தால் ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் துவக்க வீரராக களம் இறங்கினால் சந்தோஷப்படுவீர்கள். நீங்கள் ஸ்மித் நான்காவது இடத்தில் விளையாடுவதை விரும்ப மாட்டீர்கள்.ஏனென்றால் டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங்கில் அந்த இடத்தில் சிறப்பான சாதனைகளை செய்திருக்கிறார்”
“பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது என்பது வித்தியாசமான ஒன்று. அதே சமயத்தில் துவக்க வீரராக விளையாடுவது வித்தியாசமானது. துவக்க வீரராக புதிய பந்தில் முதல் 20 ஓவர்களை விளையாடுவது என்பது பெரிய சவால். எனவே அவர் துவக்க வீரராக இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வந்தால் நமக்கு மகிழ்ச்சிதான்!”
இதையும் படிங்க: விராட் கோலி கில்லுக்கு இதை செய்வீங்களா?.. ரிஷப் பண்ட்ட விட்ருங்க வேணாம் – பாகிஸ்தான் பசித் அலி கோரிக்கை
“நான் அவரை சமீபத்தில் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரிடம் நான் ‘நீங்கள் துவக்க வீரராக இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களம் இறங்குவீர்களா’ என்று கேட்டேன். அதற்கு அவர் ‘ஆமாம் நான் அது குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்’ என்று கூறினார். ஏன் அவரால் இது முடியாது சிந்திக்கிறார் என்றால், துவக்க இடத்தில் விளையாடுவது குழப்பமான ஒன்றாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.