அன்று தோனி செய்தார்; இன்று ரோகித் செய்கிறார் – முன்னாள் பயிற்சியாளர் வியப்பு!

0
494
Dhoni and Rohit sharma

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ராமகிருஷ்ணன் ஸ்ரீதர் ஆவார். 20014ஆம் ஆண்டு முதல் இந்திய தேசிய அணிக்காக பீல்டிங் பயிற்சியாளராக இருந்தவர், கடந்த ஆண்டு அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது இவர் கிரிக்கெட் வர்ணனையாளராகப் பணியாற்றி வருகிறார்!

இவர் 1989 முதல் 2001ஆம் ஆண்டு வரை ஹைதராபாத் அணிக்காக விளையாடியவர். ஸ்லோ லெப்ட் ஆர்ம் ஆர்த்தடாக்ஸ் ஸ்பின்னர். ஹைதராபாத் அணிக்காக 35 முதல்தர போட்டிகளிலும், 15 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார்!

- Advertisement -

இவர் மகேந்திர சிங் தோனி, விராட் கோலி இருவருடனும் பணியாற்றி இருக்கிறார். இவரின் பணிக்காலத்தில் இந்திய அணியின் பீல்டிங் தரம் நல்ல முறையிலேயே மேம்பட்டு இருந்தது. இந்திய அணியோடு இவருக்கு ஏழெட்டு ஆண்டுகள் தொடர் பயணம் இருந்ததால், இவருக்கு இந்திய அணி வீரர்கள் குறித்தும், ஆட்டங்கள் குறித்தும் பல நினைவுகள் இருக்கின்றன. கிரிக்கெட் வர்ணனையாளராக வந்ததில் இருந்து அதையெல்லாம் ஸ்ரீதர் பகிர்ந்து வருகிறார்!

தற்போது வெஸ்ட்இன்டீஸ் தொடரில் சூர்யகுமார் யாதவை ரோகித் சர்மா துவக்க வீரராக களமிறக்கி வருவதைப் பற்றி ஸ்ரீதர் வேறொரு நிகழ்வை வைத்து தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார். அதில் அவர் “2013ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தோனியால் ரோகித் சர்மா துவக்க வீரராகக் களமிறக்கப்பட்ட ஒரு நிகழ்வு இதைப் போலவே உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் நல்ல வேகப்பந்து வீச்சு படையைக் கொண்ட ஆஸ்திரேலியா அணியோடு 146 ரன்கள் விளாசி இருந்தார். ஆனால் ரோகித்தைதான் தோனி துவக்க வீரராகக் களமிறக்கினார். டாப் ஆர்டரில் ரோகித்க்கான இடத்தை தோனி கண்டுபிடித்தார். இது மிகப்பெரிய புத்திசாலித்தனமான நகர்வு” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய ஸ்ரீதர் “இங்கிலாந்திற்கு எதிராக டி20 போட்டியில் சூர்யகுமாரை கொண்டுவந்தது நாங்கள் எடுத்த ஒரு நகர்வு. சூர்யா இப்போது தான் யாரென்று நிரூபித்துள்ளார். ஸ்ரேயாஸ் நம்பர் 3க்கு வந்துள்ளார். இது விராட் கோலியின் இடம். அவர் விளையாடாத பொழுது ஸ்ரேயாஷ் இந்த இடத்தில் விளையாடுவார்” என்று தெரிவித்திருக்கிறார்!

- Advertisement -

மகேந்திர சிங் தோனி அன்று ரோகித் சர்மாவை வெள்ளைப்பந்து போட்டிகளில் துவக்க வீரராக அனுப்ப முடிவெடுத்தது இன்று இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் ரோகித் சர்மா துவக்க வீரராக வருவதோடு, மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கிறார். இப்பொழுது ரோகித் சர்மா சூர்யாவை துவக்க வீரராகக் கொண்டுவந்து இருக்கிறார். இந்த முடிவு தோனியின் முடிவை போல தாக்கத்தை ஏற்படுத்தமா என்று பார்ப்போம்!