“பேட்டிங்கில் இந்த இடத்திற்கு வீரரைக் கண்டறியும் நேரம் வந்துவிட்டது” – முன்னாள் தேர்வுக்குழு தலைவர்

0
197
Saba karim

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூட்டணி மிகச்சிறந்த தொலைநோக்கு திட்டத்தோடு இந்திய அணியைக் கட்டி வருகிறது. குறிப்பிட்டுச் சொல்வதென்றால் இந்தக் கூட்டணி வரும் செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் துவங்கும் டி20 உலகக்கோப்பைக்கு இல்லாது, 2023 அடுத்த ஆண்டு இந்தியாவில் துவங்கும் 50 ஓவர் உலகக்கோப்பைக்கும் இப்பொழுதே சில நகர்வுகளை ஆரம்பித்து விட்டது என்று கூறலாம்!

ரோகித்-டிராவிட் கூட்டணி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு என்பதை தாண்டி, மூத்த வீரர்களான தினேஷ் கார்த்திக், ஆர்.அஷ்வின் இருவரையும் மீண்டும் அணிக்குள் கொண்டு வந்து ஒரு புதிய திட்டத்தைத் தயாரித்திருக்கிறது. இதில் ஆர்.அஷ்வின் அடுத்த ஆண்டு உள்நாட்டில் நடக்கும் 50 ஓவர் உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நடக்கும் சில நிகழ்வுகள் இதைத்தான் உறுதிபடுத்தி வருகிறது!

- Advertisement -

தற்போது ரோகித்-ராகுல் கூட்டணிக்கு ஒரு பிரச்சினையாக இருப்பது ரன் மெசின் விராட்கோலியின் பேட்டிங் பார்ம்தான். அவர் மீண்டும் தனது அசுரத்தனமான பேட்டிங் பார்மை பிடித்து விட்டால், ரோகித்-டிராவிட்டுக்கு எந்தப் பெரிய வேலையும் அணியில் இருக்காது. குறுகிய காலத்தில் இருவரும் சேர்ந்து ஏதாவது ஒரு உலகக்கோப்பையைக் கைப்பற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

இதன் பொருட்டே விராட்கோலிக்கு முழு ஓய்வு என்று முடிவு செய்து வெஸ்ட்இன்டீஸ் தொடருக்கும், ஜிம்பாப்வே தொடருக்கும் தேர்வு செய்யாமல் விட்டு, ஆசியக்கோப்பைக்குப் புத்துணர்ச்சியோடு வரும் விராட்கோலியை இணைத்துக்கொள்வதென முடிவு செய்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்திய தேர்வுக்குழுவின் முன்னாள் தலைவர் சபாகரீம் சில முக்கியத் தகவல்முளை பகிர்ந்துள்ளார். அதில் அவர் “விராட்கோலி அணிக்குள் வரும்போது இயல்பாகவே நம்பர் 3 இடத்தைப் பிடிப்பார். அதனால் மிடில் ஆர்டருக்கான பேக்அப் பேட்ஸ்மேன் யாரென்று தேர்வாளர்கள் முடிவு செய்யும் நேரம் வந்துவிட்டது. அவர்கள் ஸ்ரேயாஷை நம்பினால் அவருடன் தொடர்ந்து விளையாட வேண்டும். அப்படி செய்தால் அவரால் எளிதாக பார்மை தக்க வைக்க முடியும். அவர்கள் பரிசோதனை முயற்சியை இன்னும் தொடர்வதாய் இருந்தால் ஹூடாதான் நம்பர் 3க்கு சரியானவர். அவர் பந்தை சிறப்பாக எதிர்கொள்கிறார். இது இந்திய அணிக்கு பிளஸ்” என்றார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “விராட் நம்பர் 3லும், கே,எல்.ராகுல் ரோகித் சர்மா துவக்க வீரர்களாவும் இருப்பார்கள். இதற்கடுத்து ரிஷாப் பண்ட், சஞ்சு சாம்சன், இஷான் கிஷான் ஆகியோரும் அணிக்கு நல்ல பங்களிப்பை தருவார்கள். அணியை ஆக்ரோசமான விளையாட்டுக்குத் தயார் படுத்தி இருக்கிறார்கள். இது சிறப்பான முடிவு. இந்தியாவின் வெற்றி உலகக்கோப்பையில் பிரகாசமாக உள்ளது” என்று நம்பிக்கை தெரிவித்தார்!