நேற்று இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்ற சஞ்சு சாம்சன் கோல்டன் டக் ஆனார். இந்த நிலையில் அவர் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வதில்லை என வெளியில் விமர்சனங்கள் சென்று கொண்டிருக்கிறது. இது குறித்து பேசி முன்னாள் இந்திய மற்றும் முன்னாள் கேரள வீரர் டினு யோஹன்னன் சஞ்சு சாம்சனுக்கு நீண்ட வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
இந்திய அணிக்காக முதன் முதலில் கேரள மாநிலத்தில் இருந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய வீரராக மிதவேக பந்துவீச்சாளர் டினு யோஹ்ன்னன் இருக்கிறார். இவர் இந்திய அணிக்காக மூன்று டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறார். 2001 ஆம் ஆண்டு ஆரம்பித்த இவரது கிரிக்கெட் வாழ்க்கை 2002 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்துவிட்டது.
இந்த நிலையில் இவர் சஞ்சு சாம்சனுக்கு ஒவ்வொரு போட்டியும் வாழ்வா சாவா? என்கின்ற போட்டியாக இருப்பதாகவும், அதே சமயத்தில் சஞ்சு சாம்சன் அழுத்தத்தை எடுத்துக் கொள்ளக் கூடிய ஆள் கிடையாது என்றும், எனவே அவருக்கு இந்த நிர்பந்தத்தை உருவாக்காமல் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
இது குறித்து டினு யோஹன்னன் கூறும் பொழுது “சஞ்சு சாம்சன் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணியில் அறிமுகம் ஆனார். ஆனால் அவர் இன்று வரையில் அணிக்கு உள்ளே வெளியே என்று இருக்கிறார். அவருக்கு இந்திய அணியில் நீண்ட வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. அவர் ஒவ்வொரு முறை பேட்டிங் செய்ய உள்ளே செல்லும் பொழுதும் வாழ்வா சாவா? நிலையே இருக்கிறது. அவருக்கு தற்போது ஆதரவு தேவை. கூடவே நிறைய வாய்ப்புகள் கொடுக்க வேண்டும்.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அவருடைய பங்கு என்னவென்று அவருக்கு தெரியும். எனவே அவர் பேட்டிங்கில் தோல்வியடைந்தாலும் கூட அது பிரச்சனை இல்லை என்று அவருக்கு தெரியும். மேலும் இந்த இந்திய அணியில் அப்படி இருக்க முடியாது என்று எனக்கும் தெரியும். ஏனென்றால் ரிஷப் பண்ட் தற்பொழுது வந்துவிட்டார். ஆனால் கூட சஞ்சு சம்சனுக்கு நீண்ட வாய்ப்புகள் தர வேண்டும்.
இதையும் படிங்க : எனக்கு அந்த 3 பேர் இருக்க வரை கவலையில்ல.. கம்பீர் ஸார் இதை செய்ய சொல்லி இருக்கார் – ரவி பிஸ்னாய் பேட்டி
சஞ்சு சாம்சன் தனக்குத்தானே அழுத்தத்தை கொடுத்துக் கொள்ளக்கூடிய பையன் கிடையாது. அவர் எப்பொழுதும் சுதந்திரமாக விளையாடக் கூடியவர். அவருக்கு கடிவாளம் போடாத இடத்தில் அவர் மிகவும் சிறப்பாக இருப்பார். தனது கடைசி ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம் அடித்தார் ஆனால் அவருக்கு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் இதையெல்லாம் பெரிதாக நினைக்காத ஒரு கட்டத்தை அவர் தற்போது எட்டி இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.






