இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் வாய்ப்பு பெற்று விளையாடினார்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் ஆன ஹர்பஜன் சிங் இதுகுறித்து சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.
வாஷிங்டன் சுந்தர் மீண்டும் இடம் பிடிக்க காரணம்
ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த முன்னணி சுழற் பந்துவீச்சாளராக இருக்கிறார். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை என்றாலும் டெஸ்ட் அணியில் ஒரு தவிர்க்க முடியாத பந்துவீச்சாளராக திகழ்கிறார். இந்த சூழ்நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் டெஸ்ட் அணியில் விளையாடிய மற்றொரு தமிழக வீரனான வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் களமிறங்கி விளையாடினார்.
அந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தாலும் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக செயல்பட்டு பந்து வீசித் திறமையை நிரூபித்தார். இதனால் அவருக்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய மூத்த வீரர்கள் இருந்தாலும் அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு சுழற் பந்துவீச்சாளராக வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்று விளையாடினார். இந்த சூழ்நிலையில் அஸ்வினுக்கு மாற்று வீரராக சுந்தரை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் பார்ப்பதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்களின் திட்டம் இதுதான் என்று நினைக்கிறேன். ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி மிகப்பெரிய சாதனைகள் செய்திருக்கிறார். ஆனால் தற்போது அஸ்வினுக்கு 38 வயது ஆவதால் அவர் ஓய்வு பெரும் தருவாயில் இருக்கிறார். இந்த காரணத்தால் தான் வாசிங்டன் சுந்தர் மீண்டும் வாய்ப்பு பெற்று இந்திய அணியில் இணைந்து விளையாடி வருகிறார்.
இதையும் படிங்க:நம்ம பிளேயர்ஸ நினைச்சா பெருமையா இருக்கு.. ஈகோ பாக்காம இத செய்யறாங்க – பிசிசிஐ ஜெயிஷா புகழாரம்
இந்திய கிரிக்கெட் வாரியம் அடுத்த எதிர்கால பந்துவீச்சாளராக வாஷிங்டன் சுந்தரை தயார் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் அந்தத் திட்டத்தில் பணியாற்றி வருகிறார்கள்” என்று கூறி இருக்கிறார். எனவே ரவிச்சந்திரன் அஸ்வின் விரைவாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் நிலையில் அவருக்கு அடுத்ததாக வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.