கடந்த ஐபிஎல் தொடரின் சாம்பியன் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தற்போது இந்த ஐபிஎல் தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றி இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு கொல்கத்தா அணி ஐபிஎல் கோப்பையை வென்றதற்கு காரணம் கௌதம் கம்பீர் அல்ல என்று ஆச்சரியமான தகவலை இந்திய மற்றும் பெங்கால் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அருண் லால் கூறியிருக்கிறார்.
கொல்கத்தா அணி சாம்பியன்
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடரின் தொடக்கத்தில் இருந்தே தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்தது. லீக் சுற்றின் முடிவில் முதல் இடத்தை பிடித்த கொல்கத்தா, பிளே ஆப் சுற்றில் சன் ரைசர்ஸ் அணியை தோற்கடித்து இறுதி போட்டிக்கு முன்னேறியது. மேலும் இறுதிப் போட்டியிலும் இதே சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
இந்த சூழ்நிலையில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர்தான் என அப்போதே பரவலான விமர்சனங்கள் இருந்தது. மேலும் மீடியாக்களும் அவரை அதிக அளவில் காண்பிக்கும் நிலையில் அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளரை விட ஆலோசகர் கம்பீருக்கு அதிக பங்கு இருக்கிறது என்று கருத்துக்கள் நிலவும் நிலையில் இதனை இந்திய அணியின் முன்னாள் வீரர் அருண் லால் மறுத்து பேசி இருக்கிறார்.
கம்பீர் காரணம் இல்லை
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது ” ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார். ஆனால் அவரது தலைமையில் தான் ரஞ்சிக்கோப்பையும் வெல்லப்பட்டுள்ளது. மேலும் கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் இன்னும் பயிற்சியாளராக இருக்கிறார், இல்லையா? எனவே கொல்கத்தா அணி சாம்பியன் கோப்பையை வென்றதற்கு அதிக அளவில் பெருமை அவருக்குத்தான் சேரும். அவர்தான் கொல்கத்தா அணியின் இறுதி அதிகாரம். ஆனால் அந்த விஷயம் அங்கேயே நின்று விடுகிறது.
இதையும் படிங்க:தோனி மீதான விமர்சனம்.. அவரை தவறான முடிவு எடுக்க வைக்கும்.. மகத்தான கேப்டனுக்கு இப்படி செய்யாதீங்க – கிறிஸ் கெயில் வேண்டுகோள்
இந்த பாராட்டுகளை யார் தீர்மானிப்பது? அது மிகக் குறைவு அணியில் 90% பங்களிப்பு அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருவர் தான் செயல்படுகின்றனர். வெற்றி பெறும் போது அவர்கள் இருவரும் தான் அதிக அளவில் பாராட்டுக்களையும் தோல்வியடையும்போது அவர்கள் இருவருமே அதிக அளவில் விமர்சனங்களையும் பெறுகிறார்கள்” என்று லால் கூறி இருக்கிறார். கொல்கத்தா அணியின் கேப்டனாக திகழ்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது இந்த வருடம் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் பஞ்சாப் அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.






