ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 30-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகள் விளையாடிய ஆட்டத்தில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த சூழ்நிலையில் எம்எஸ் தோனி குறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
ஆட்டத்தை முடித்துக் கொடுத்த தோனி
இந்த போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 49 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஜடேஜா மற்றும் பத்திராணா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது. முந்தைய போட்டிகளில் மெதுவாக விளையாடியதற்காகவும், பேட்டிங் வரிசையில் ஒன்பதாவது இடத்தில் களம் இறங்கியதற்காகவும் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்ட மகேந்திர சிங் தோனி இந்த முறை அந்த இரண்டு குறைகளையும் நிவர்த்தி செய்தார். அணி 5 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான சூழ்நிலையில் இருந்த போது ஏழாவது வரிசையில் களம் இறங்கிய தோனி 11 பந்துகளில் 26 ரன்கள் குவித்து சென்னை அணி வெற்றி பெற காரணமாக அமைந்தார்.
நிறைய அவமானங்களை சந்தித்தார்
இந்த சூழ்நிலையில் இது குறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் போது “சிங்கத்திற்கு வயதாகி இருக்கலாம், ஆனால் அது வேட்டையாடுவதை இன்னும் நிறுத்தவில்லை என்று நாங்கள் இன்னமும் சொல்லி வருகிறோம். இப்போதும் கூட தோனி சில சிறப்பான ஷாட்களை விளையாடி வருகிறார். அவர் ஒற்றை கையால் அடித்த சிக்ஸ் அற்புதமானதாக இருந்தது. அவர் இறுதி வரை நின்று போராடி ஆட்டத்தை வெற்றி பெற்றும் கொடுத்து விட்டார்.
இதையும் படிங்க:43 வயதில் கேப்டன் தோனி படைத்த மாபெரும் சாதனை.. ஐபிஎல் வரலாற்றில் யாருக்குமே இது மாதிரி நடந்ததில்ல.. முழு விபரம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை ஐபிஎல் கோப்பையை வெல்லும் என்று நான் கூறவில்லை. மேலும் எந்த விசித்திரமான கதைகளையும் கூறப் போவதில்லை. நேற்றைய போட்டியில் எம்எஸ் தோனி போட்டியை வென்று கொடுத்து ரன்கள் குவித்திருக்கிறார். மெதுவாக விளையாடியதற்காக நிறைய அவமானப்படுத்தப்பட்ட நிலையில் அதற்கு தற்போது சரியான பதிலடி கொடுத்திருக்கிறார். தோனி சென்னை அணிக்காக நிறைய அவமானங்களை பொறுத்துக் கொண்டுள்ளார்” என்று ஆகாஷ் கோபுரா பேசியிருக்கிறார்.