இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டி நாளை துபாய் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் நாளை நடைபெற உள்ள போட்டி குறித்து சில முக்கியமான விஷயங்களை பேசி இருக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி இதுவரை வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளை வீழ்த்தி அரைஇறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியையும் வீழ்த்தி தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. அதேபோல நியூசிலாந்து அணியும், பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளை வீழ்த்தி இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டியில் மட்டும் தோல்வி அடைந்தது. மேலும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.
நியூசிலாந்து அணி ஏற்கனவே துபாயில் இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்திருந்தாலும் தான் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு இறுதி போட்டியில் இந்திய அணிக்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு சவாலாக இருக்கும் என்ற சில முக்கியமான விஷயங்களை பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்திய அணிக்கு சாதகம் இருக்கிறது என்பது உண்மைதான், ஆனால் நியூசிலாந்து அணி தற்போது ஒரு மேம்பட்ட அணியாக உள்ளது. கேன் வில்லியம்சன் இப்போது தனது சொந்த திறமையை வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடி வருகிறார். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான சூத்திரத்தை அவர்கள் கண்டுபிடித்து விட்டதாக நினைக்கிறேன். தென் ஆப்பிரிக்கா அணியிடம் இல்லாத சுழல் சாதகமும், துபாயில் இந்திய அணிக்கு எதிராக விளையாடிய ஆஸ்திரேலியா அணியிடம் இல்லாத சாதகமும் நியூசிலாந்து அணி இடம் இருக்கிறது.
இதையும் படிங்க:சாம்பியன்ஸ் டிராபி 2025: கோலிக்கு ‘தங்க பேட்’ கிடைக்குமா.?. யாருக்கு கிடைக்க அதிக வாய்ப்பு.. முழு விபரம்
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர்கள் இரண்டு பேர் அடித்த சதம் தான் நியூசிலாந்து அணியின் முன்னேற்றத்திற்கு பெரிய சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள் என்று தோன்றுகிறது. டாம் லாதம், வில் யங், ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் போன்றவர்கள் சுழற்சிக்கு எதிராக எப்படி ரன்கள் எடுப்பது என்று நன்றாகவே தெரியும். இதனால் இந்திய அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.