டெல்லி அணியின் பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங், தற்போது அந்த பதவியை விட்டு வெளியேறி இருக்கும் நிலையில், இந்திய வீரர் பிரித்விஷா குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார். அவரிடம் இருந்து எதிர்பார்த்த விஷயங்களை அவர் செய்யத் தவறியதாகவும், அதனால் வேறு வழி இல்லாமல் அவருக்கு மாற்று வீரரை தேட வேண்டிய சூழ்நிலையில் இருந்ததாகவும் கூறியிருக்கிறார்.
ஒரு சமயத்தில் பிரித்வி ஷா இந்திய அணியின் அடுத்த எதிர்காலமாகவே கருதப்பட்டார். ஐபிஎல் தொடரிலும் சர்வதேச தொடரிலும் ஒரு மிகச் சிறப்பான தொடக்கத்தை பெற்றிருந்தார். 2018ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி டெஸ்ட் தொடரில் சதமும் அடித்து இருந்தார். மிகச் சிறந்த பார்மில் இருந்த அவர் 2020ம் ஆண்டு டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களிலும் அறிமுகமானார்.
அதற்குப் பிறகு அவரது பேட்டிங் ஃபார்ம் சரிந்த நிலையில் 2021ம் ஆண்டுக்குப் பிறகு, அவர் இந்திய அணியில் எந்த தொடரிலும் இடம் பிடிக்கவில்லை. அது மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த சூழ்நிலையில் 2024ஆம் ஆண்டிலும் தொடரின் பாதி வரை பிரத்விஷா பிளேயிங் லெவனில் இடம் பிடிக்கவில்லை. அதற்குப் பிறகுதான் ப்ரித்வி ஓரளவு சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினார்.
இது குறித்து ரிக்கி பாண்டிங் கூறும்போது “எனக்கு எப்போதுமே தனிப்பட்ட வீரர்களை பற்றி பேசுவது பிடிக்காது. ஆனால் ப்ரித்வி ஷா வெளிநாட்டு வீரர் இல்லை. எல்லா அணிகளிலும் சிறப்பான திறமையுடன் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களில் ஒருவராக இருக்கிறார். இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வீரராக இருக்கும் அவர், தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமும் அடித்தார்.
நீங்கள் சொல்வது போலவே இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரின் பாதி வரையிலும் அவருக்கான இடத்தை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் நான் ஒரு பயிற்சியாளராக குறிப்பிட்ட வீரர்களை சிறப்பாக உருவாக்கி, அவர்களிடமிருந்து சிறந்ததை வெளிக்கொண்டு வர முடியாமல் போனது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் சில நேரங்களில் உங்களால் சிறப்பானவற்றை கொடுக்க முயற்சி மட்டுமே செய்ய முடியும்.
இதையும் படிங்க:17 பந்து 50 ரன்..மேட்ச்சை திருப்பிய ஷாருக் கான்.. திரில் போட்டியில் 1 விக்கெட்டில் கோவை சேலம் அணியை வென்றது
எப்போது உங்களால் வீரர்களை சிறப்பாக உருவாக்க முடியவில்லை என்றும் அவர்கள் அணிக்கு சிறந்தவற்றை தர முடியவில்லை என்று உணர்கிறீர்களோ, சிறப்பாக செய்யக்கூடிய மற்ற வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். ப்ரித்விஷாவிடம் நான் நிறைய பேசியிருக்கிறேன். அவரை சிறந்த வீரராக மாற்றுவதற்கு நிறைய உரையாடல்களையும் மேற்கொண்டு இருக்கிறேன். அவர் இன்னும் ஒரு இளைஞர். அவரிடம் இன்னும் திறமை இருக்கிறது. சிறந்த கிரிக்கெட் வீரராக வருவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை தற்போது செய்கிறார்” என்று கூறியிருக்கிறார்.






