விராட் கோலி ரோஹித் சர்மா உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவது குறித்து இந்திய தேர்வு குழு தெளிவாக இருக்க வேண்டும் என முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியிருக்கிறார்.
தற்போது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்திய உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபியில் விளையாட வேண்டும் என இந்தியத் தேர்வுக்குழு விரும்புகிறது. அதே சமயத்தில் உள்நாட்டு தொடரில் விளையாட இரண்டு வீரர்களுக்கும் முழு சம்மதம் இல்லை என்று தெரிகிறது. இது இரு தரப்புக்கும் இடையே பிரச்சனையாக சென்று கொண்டு இருக்கிறது.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்து இந்திய அணியை வெல்ல வைத்து விராட் கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார். அதற்குப் பிறகு பேசிய அவர் தன்னுடைய கிரிக்கெட் தயாரிப்பில் இல்லை எனவும், தான் அதிக பயிற்சியில் நம்பிக்கை கொண்டவன் இல்லை எனவும், தன்னுடைய கிரிக்கெட் மனரீதியானது என்றும் கூறியிருந்தார்.
இதன் மூலம் தனக்கு அதிக பயிற்சிகளும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதும் தேவையில்லை என்று விராட் கோலி மறைமுகமாகத் தெரிவித்து இருந்தார். தற்போது தென் ஆப்பிரிக்க ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்ததும் இது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
இதுகுறித்து முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறும் பொழுது ” தற்போது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவது குறித்த விஷயம் பிரச்சினையாக எழுப்பாமல் இருக்க வேண்டும். நாங்கள் தோனி விளையாடிய காலத்தில் அவரிடம் உள்நாட்டு கிரிக்கெட் விளையாடுவது குறித்து பேசியது கிடையாது. அவரே அவசியம் என்று நினைக்கும் பொழுது விளையாடினார். முன்கூட்டியே தகவல் தொடர்பு தெளிவாக இருக்க வேண்டும். தெளிவின்மைக்கு எந்த வாய்ப்பும் இருக்கக் கூடாது”
இதையும் படிங்க : கம்பீருக்கு தெளிவான சிந்தனையும் தடித்த தோலும் இருக்கணும்.. இந்தியாவுல இத பண்ணுங்க – ஜாகிர் கான் அறிவுரை
“இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இவ்வளவு பெரிய வீரர்களின் மனதை குழப்பக் கூடாது. தற்போது அவர்கள் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் இளம் வீரர்கள் கிடையாது. அதே சமயத்தில் அவர்கள் தேசிய அணிக்காக விளையாடாமல் இருக்கும்போது உள்நாட்டு அணிக்கு விளையாடலாம். ஏனென்றால் அது அந்த அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு ஊக்கமாக இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.