இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு நடைபெற உள்ள நிலையில், ஏற்கனவே முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் வங்கதேச அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான தமிம் இக்பால் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் குறித்த சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
அர்ஸ்தீப் சிங் அசத்தல் பந்துவீச்சு
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் விளையாடி வரும் நிலையில் டெஸ்ட் தொடர் முடித்த பிறகு தற்போது டி20 தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 19.5 ஓவர்களில் 127 ரன்கள் மட்டும் குவித்தது. இதில் குறிப்பாக இந்திய வேகப்பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங் மிகச் சிறப்பாக பந்து வீசி 3.5 ஓவர்களில் 14 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரான பர்வாஸ் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோரையும் மற்றும் கடைசி விக்கட்டாக முஸ்தபிக்குர் ரஹ்மானையும் வீழ்த்தினார்.இந்த சூழ்நிலையில் வங்கதேச அணியின் முன்னாள் வீரராக திகழ்ந்த தமிம் இக்பால் மக்கள் மற்ற வீரர்களின் பந்துவீச்சு குறித்து அதிகம் பேசுகிறார்கள் எனவும், அர்ஸ்தீப் சிங்கின் பந்துவீச்சு குறித்து பெரிதாக பேசவில்லை என்று கூறி இருக்கிறார். மேலும் இந்திய அணியில் சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் திரும்பினாலும் இவர் பிளேயிங் லெவனில் தொடர வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
மக்கள் யாரும் பெரிதாக பேசுவதில்லை
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “அர்ஸ்தீப் சிங் வங்கதேச அணிக்கு எதிராக வீசிய கடைசி ஓவர் நம்ப முடியாத வகையில் இருந்தது. மக்கள் மற்ற வீரர்கள் வீசிய ஓவர்கள் குறித்து பேசுகிறார்கள். ஆனால் அர்ஸ்தீப் சிங் வீசிய ஓவர் குறித்து யாரும் பேசவில்லை. அவர் வீசிய நான்கு ஓவர்கள் மிக முக்கியமானது. அவரிடம் பிடித்த சிறந்த விஷயம் என்னவென்றால் அவர் தனது வரம்புகளை அறிந்திருக்கிறார். அவர் தனது வரம்புகளை மீறி ஒருபோதும் வெளியே வருவதில்லை.
இதையும் படிங்க:பேட் கையில இருக்கப்ப சுயநலத்தை பார்க்கவே இல்லை.. எங்க ரூட் சச்சின் சாதனையை உடைப்பார் – பென் ஸ்டோக்ஸ் உறுதி
மேலும் தன்னால் என்ன செய்ய முடியும் என்ன செய்ய முடியாது என்பது குறித்து தெளிவாக அறிந்து வைத்திருக்கிறார். இதை நாம் இப்போது பேசுகிற ஒரு போட்டியை வைத்து மட்டுமே இல்லை. அவர் இந்திய அணிக்காக பல ஆண்டுகளாக இதை செய்து வருகிறார். பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இவர் இந்திய அணியில் பிளேயிங் லெவனில் நிச்சயமாக தொடர்வார்” என்று கூறி இருக்கிறார்.






