இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் எப்பொழுதும் அணிக்காக சுயநலமில்லாமல் விளையாடக்கூடியவர் என இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்திருக்கிறார்.
தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த அலைஸ்டர் குக் சாதனையை முறியடித்தார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் ரன்கள் மற்றும் சதங்கள் அடித்துள்ள சச்சின் சாதனையை முறியடிப்பதற்கான வாய்ப்பிலும் இருக்கிறார்.
நான் ஜோ ரூட்டுக்கு சப்போர்ட் செய்கிறேன்
ஜோ ரூட் சச்சின் சாதனையை முறியடிக்க முடியுமா என்பது குறித்து பேசிய பென் ஸ்டோக்ஸ் “பாருங்கள் அவருக்கு வயதை இப்பொழுது 33 தான் ஆகிறது. அவர் தொடர்ச்சியாக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். அவரால் 37 வயதில் இருந்து 39 வயது வரைக்கும் விளையாட முடியும் என்று நான் நம்புகிறேன். சச்சின் சாதனையை அவர் முறியடிக்க முடியுமா என்றால், குறைந்தபட்சம் அதை முறியடிப்பதற்கான வாய்ப்பிலாவது அவர் இருப்பார். இந்த விஷயத்தில் நான் அவருக்கு சப்போர்ட் செய்கிறேன்”
“இவ்வளவு ரன்அடித்து இருக்கும் வீரருக்கு சுயநலம் கொஞ்சமாவது இருக்க வேண்டும் என்று நாம் நினைப்போம். ஆனால் ஜோ ரூட் கையில் பேட் இருந்த பொழுதெல்லாம் அவர் எப்பொழுதும் அணிக்காகவே சுயநலமில்லாமல் விளையாடி இருக்கிறார். அவர் செய்தது எல்லாமே அணிக்காகத்தான்”
நம்ப முடியாத அளவுக்கு சிறந்தவர் ஜோ ரூட்
மேலும் பேசிய பென் ஸ்டோக்ஸ் கூறும்போது “அவரிடம் உள்ள தன்னலமற்ற பண்பு ஒரு நம்ப முடியாத விஷயமாக சிறப்பாக இருந்திருக்கிறது. அவர் எப்பொழுதும் அணிக்குத்தான் முதலிடம் கொடுக்கக் கூடியவர். யாராவது வந்து அவருடைய சாதனைகளை உடைக்க வேண்டும் என்றால், மிக நீண்ட நீண்ட காலம் எடுக்கும்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : ஜோ ரூட் இங்கிலாந்து கிரிக்கெட்டில் சரித்திர சம்பவம்.. பாகிஸ்தான் டெஸ்டில் குவியும் சாதனைகள்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் 15 ஆயிரத்து 921 ரன்கள் எடுத்திருக்கிறார். ஜோ ரூட் தற்போதைக்கு 12,473 ரன்கள் எடுத்து தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார். மேற்கொண்டு அவருக்கு 3500 ரன்கள் மட்டுமே தேவையாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சச்சின் சாதனையை ஒருவர் முறியடிக்க கூடிய வாய்ப்பில் இருந்தாலே அவர் சிறந்தவர் என்பதில் மாற்று கருத்து இல்லை!