“எல்லார விட.. கோலியின் விக்கெட் எடுக்கிறது தான் ரொம்ப ஈசி..” – ஆஸ்திரேலியா நட்சத்திர பவுலர் சர்ச்சை கருத்து

0
450

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஜான்சன், இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலிதான் தனது எளிதான விக்கெட் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் முன்னால் வேகப்பந்துவீச்சாளரான மிட்செல் ஜான்சன், 2005ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியில் நுழைந்தவர். ஆஸ்திரேலியா அணியின் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் இவரும் ஒருவர். இவர் மணிக்கு சுமார் 145 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் சாதாரணமாக வீசக்கூடிய அசாதாரணமான பவுலர்.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணி ஒரு சில போட்டிகளில் குறைவான ரன்களை அடித்து இருந்தாலும் கூட பிரெட்லி, மிட்சல் ஜான்சன் மற்றும் ஷான் டெயிட் ஆகிய பவுலர்களை வைத்துக்கொண்டு எதிரணியை அவ்வளவு எளிதில் வெற்றி பெற விடாது.

ஆஸ்திரேலியா அணி உலக கோப்பைகளை வென்ற 2007, 2015 மற்றும் 2006ல் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அணியில் இவரும் ஒரு முக்கியப் பங்கு வகித்தார். இவர் ஐபிஎல்இல் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக விளையாடியவர்.

இவருக்கென ஒரு தனி பௌலிங் ஸ்டைல் உண்டு. இவர் கையில் பந்தை வைத்துக்கொண்டு பேட்ஸ்மேனை நோக்கி களத்தில் ஓடி வரும்போது, எதிரணி பேட்ஸ்மேனுக்குக் கூட சற்று கலக்கத்தை தரும். இவரது பந்து வீச்சு ஸ்டைலுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

- Advertisement -

எனினும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஆக்டிவாக இருக்கும் மிட்சல் ஜான்சன், சில சர்ச்சையான கருத்துக்களைக் கூறியும் வருகிறார்.
சமீபத்தில் ரசிகர் ஒருவர் நீங்கள் விராட் கோலியின் விருப்பமான பவுலரா? என்று கேட்டதற்கு “நான் விளையாடிய நாட்களில் விராட் கோலிதான் எனக்கு எளிதான விக்கெட். மேலும் நான் ஓய்வில் இருந்து திரும்ப வந்து வலது கையில் பந்து வீசினாலும் முன்னாள் இந்திய கேப்டனை என்னால் ஆதிக்கம் செலுத்த முடியும்” என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார்.

இதனைக் கண்ட விராட் கோலியின் ரசிகர்கள் மிட்சல் ஜான்சனை கமெண்ட்களால் ட்ரோல் செய்து வருகின்றனர். இதனைக் கண்டு சற்றும் பின்வாங்காத ஜான்சன் ரசிகர்களின் கமெண்ட்களுக்குத் தொடர்ந்து பதிலடி கொடுத்துக் கொண்டே இருந்தார்.

இருப்பினும் சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி, ஜான்சன் இருவரும் 14 முறை நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். ஆனால் அதில் ஜான்சன் நாலு முறை மட்டுமே விராட் கோலியை அவுட் ஆக்கியுள்ளார். இவர் 590 சர்வதேச விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர். இவர் சமீபத்தில் பந்தை சேதப்படுத்திய டேவிட் வார்னருக்கு எதற்கு பிரியாவிடைப் போட்டி என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.