ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் ருத்ராஜ் தலைமையிலான இந்திய ஏ அணி பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலியா முன்னாள் விக்கெட் கீப்பர் இயான் ஹீலி குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.
தற்போது ஆஸ்திரேலியாவிற்கு சென்று உள்ள இந்திய ஏ அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக விளையாடுகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியும் அடைந்திருக்கிறது.
224 ரன்கள் இலக்கு
நடந்து முடிந்திருக்கும் இந்த முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 106 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் சாய் சுதர்சன் சதம் அடிக்க தேவ்தத் படிக்கல் அரை சதம் அடிக்க இந்திய அணி கௌரவமான ஸ்கோரை பெற்று ஆஸ்திரேலியா அணிக்கு 224 ரன்கள் இலக்கு வைத்தது.
இதை ஆஸ்திரேலியா அணி துரத்தி வென்றது. அந்த அணியின் கேப்டன் நாதன் ஸ்வீப்னி ஆட்டம் இழக்காமல் 88 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் இந்திய அணி பந்துவீச்சில் இருந்த பொழுது திடீரென நடுவர் பந்தை பரிசோதித்து புதிய பந்தை மாற்றினார். மேலும் பந்து சேதமாக இருக்கின்ற காரணத்தினால் பந்து மாற்றப்பட்டதாக கூறினார். இதனால் இந்திய அணி ரிவர்ஸ் ஸ்விங் செய்யும் வாய்ப்பு பறிக்கப்பட்டது. அப்போது விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் முட்டாள்தனமானது என விமர்சனம் செய்தார். நடுவர்கள் அவருக்கு எச்சரிக்கை விடுத்தார்கள்.
இந்திய அணி பந்தை சேதப்படுத்தியது
இதுகுறித்து இயான் ஹீலி கூறும் பொழுது ” ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களை அழுத்தத்திற்கு உள்ளாக்குவதற்காக, இந்திய அணியினர் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்வதற்கு தயார் படுத்தி வந்தார்கள். ஆஸ்திரேலியா அப்பொழுது ஒரு சிறிய இலக்கை நோக்கி விளையாடியது. ஆஸ்திரேலியா வீரர்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டு நிதானமாக விளையாடி போட்டியை வென்றார்கள்”
இதையும் படிங்க : நான் இந்திய அணியில் இருந்தா.. இப்ப பதட்டமாதான் இருப்பேன்.. நியூஸி செஞ்ச அதை ஆஸி செய்யணும் – டேவிட் வார்னர் பேட்டி
“இந்த நிலையில் பந்து திடீரென நடுவர்களால் மாற்றப்பட்டது. இதனால் இந்தியர்கள் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்யும் வாய்ப்பு பறிக்கப்பட்டது. பந்து சேதப்படுத்தப்பட்டு இருக்கின்ற காரணத்தினால்தான் மாற்றப்பட்டது. எனவே இந்திய அணியினர் பந்தை ஏதோ செய்திருக்கிறார்கள். பிறகு நடுவர்கள் இந்த விவகாரத்தில் இந்திய அணியினரை உள்ளே கொண்டு வரவில்லை. இருந்தபோதிலும் களத்தில் இது குறித்து வாக்குவாதம் செய்த இந்திய அணியினர் ஊடகத்திற்கு முன்னால் இந்த விஷயத்தை பேச முன்வரவில்லை. அவர்கள் பந்தை ஏதோ செய்திருப்பதுதான் காரணம்” என்று கூறியிருக்கிறார்.