இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடிய போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது!
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் அப்துல்லா ஷபிக் 58, இமாம் உல் ஹக் 17, முகமது ரிஸ்வான் 8, சவுத் சகீல் 25, கேப்டன் பாபர் அசாம் 74 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
இந்த இடத்தில் பாகிஸ்தான் அணி ஐந்து விக்கெட்டுகள் இழந்து 46 ஓவர்களில் 234 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. சதாப் கான் மற்றும் இப்திகார் அகமது இருவரும் கூட்டணி சேர்ந்து, இருவரும் தலா 40 ரன்கள் அதிரடியாக எடுத்து, பாகிஸ்தான் அணியை 282 ரன்கள் என்கின்ற இடத்திற்கு கொண்டு வந்தார்கள். பாகிஸ்தான அணி மொத்தமாக ஏழு விக்கெட்டுகளை இழந்தது.
ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் இன்று உலகக்கோப்பை தொடரில் முதல்முறையாக வாய்ப்பு பெற்ற நூர் அகமது பத்து ஓவர்களுக்கு 49 ரன்கள் தந்து, மூன்று விக்கெட் கைப்பற்றினார். நவீன் உல் ஹக் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.
இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாட ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் மிகச் சிறப்பான துவக்கத்தை தந்தார்கள். முதல் விக்கெட்டுக்கு 21.1 ஓவரில் 130 ரன்கள் வந்தது. ரகமனுல்லா குர்பாஸ் 53 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதற்கு அடுத்து ரஹமத் ஷா, இப்ராஹிம் ஜட்ரன் உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. சிறப்பாக விளையாடிய இப்ராஹிம் ஜட்ரன் 113 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதற்கு அடுத்து ரஹமத் ஷா உடன் கேப்டன் ஹசமத்துல்லா ஷாகிதி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இறுதிவரை களத்தில் நின்று 49 ஓவர்களில் இலக்கை எட்டி, ஆப்கானிஸ்தான் அணிக்கு வரலாற்று வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. ரஹ்மத் ஷா 84 பந்துகளில் 77 ரன்கள், ஹசமத்துல்லா ஷாகிதி 45 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார்கள்.
இதுவரை மொத்தமாக இரண்டு வடிவத்திலும் உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஏழு போட்டியில் விளையாடி ஏழிலும் ஆப்கானிஸ்தான் தோல்வி அடைந்திருந்தது. இன்று உலகக்கோப்பையில் முதல் முறையாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றி பெற்று இருக்கிறது. மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இது முதல் வெற்றியாகும்.
இந்தத் தோல்வியின் மூலம் புள்ளி பட்டியலில் பாகிஸ்தான் அணிக்கு பாதிப்பில்லாமல் தொடர்ச்சியாக நான்காவது இடத்திலேயே தொடர்கிறது. ஆனால் ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றியால் பத்தாவது இடத்திற்கு உலக சாம்பியன் இங்கிலாந்து தள்ளப்பட்டு இருக்கிறது. ஆப்கானிஸ்தான் ஐந்தாவது இடத்திற்கு தற்பொழுது முன்னேறி இருக்கிறது!
பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை 5 ஆட்டங்களில் மூன்று ஆட்டங்களை தோற்று இருக்கிறது. வெற்றி பெற்ற இரண்டு ஆட்டங்களும் சிறிய அணிகளுக்கு எதிராக இருக்கிறது. எனவே அடுத்து வரும் நான்கு ஆட்டங்களையும் வென்றால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் அரையிறுதியை யோசிக்க முடியும்!