2023 ஐபிஎல் தொடருக்கு முன்பாக ரூல்டு அவுட் ஆகியுள்ள ஐந்து நட்சத்திர வீரர்கள்!

0
808
Bumrah

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் 15 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் டி20 லீக் ஐபிஎல் தொடர் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி துவங்கி மே 28ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. கடந்த ஆண்டு மெகா ஏலம் முடிந்து இந்த ஆண்டு மினி ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் தங்கள் அணி கட்டமைப்பில் இருந்த குறைகளை சரி செய்து முழுமையான போட்டி அளிக்க தயாராக இருக்கிறார்கள்!

கிரிக்கெட் விளையாடப்படும் நாடுகளில் இருக்கும் அதிகபட்ச ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஒரு தொடராக விளங்கும் ஐபிஎல் தொடரில், இந்த ஆண்டு 16-வது சீசனில் ஐந்து அணிகளில் இருந்து மிக முக்கியமான ஐந்து வீரர்கள் காயத்தால் தொடர் தொடங்குவதற்கு முன்பே விலகி இருக்கிறார்கள். அவர்கள் யார் என்று இந்த சிறிய கட்டுரையில் பார்ப்போம்!

- Advertisement -

ஜஸ்ட்ப்ரீத் பும்ரா மும்பை இந்தியன்ஸ்;

கடந்த மெகா ஏலத்தின் போது மும்பை அணியால் அதிவேக ஆர்ச்சர் வாங்கப்பட, ஆர்ச்சரும், பும்ராவும் சேர்ந்து வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான வான்கடே மைதானத்தில் பந்து வீச்சில் எப்படி கலக்குவார்கள் என்று ரசிகர்கள் காத்திருக்க, இந்த சீசனுக்கு ஆர்ச்சர் திரும்பி வந்திருக்கும் வேளையில் பும்ரா முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் இந்த வருட ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறி இருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை கொடுத்திருக்கிறது.

ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் ;

- Advertisement -

ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் எதிர்பாராத சாலை விபத்தில் சில மாதத்திற்கு முன்பு சிக்கியதால் இந்த வருட ஐபிஎல் தொடரை தவறவிடுகிறார். டெல்லி அணி ரசிகர்களை தாண்டி ஒட்டுமொத்த ஐபிஎல் ரசிகர்களுக்கும், இப்படியான முறையில் ரிசப் பண்ட் ஐபிஎல் தொடரை தவறவிடுவது வருத்தத்திற்குரிய ஒன்றாகவே இருக்கிறது!

கையில் ஜேமிசன் சென்னை சூப்பர் கிங்ஸ்;

இந்த வருட மினி ஏலத்தின் போது சென்னை அணிக்காக நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த இந்த வலது கை வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் வாங்கப்பட்டார். சென்னை அணியில் இடம் பெற்று இருக்கும் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் பிரிட்டோரியசுக்கு மாற்று வீரராக இடம்பெற்ற இவர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரை விட்டு விலகி இருக்கிறார். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக உள்நாட்டில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

பிரசித் கிருஷ்ணா ராஜஸ்தான் ராயல்ஸ் ;

கடந்த வருட மெகா ஏலத்தின் போது விளையாடும் அணிக்குத் தேவையான கச்சிதமான வீரர்களை மட்டுமே வாங்கி சிக்கனமாக விளங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியது. இந்திய வேகப்பந்துவீச்சாளராக பிரசித் கிருஷ்ணா விளையாடும் அணியில் முக்கிய வீரராக இடம்பெற்று இருந்தார். தற்சமயம் இவர் காயத்தால் அணியை விட்டு விலகி இருப்பது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பெரிய அடியாகும்!

ஜைய் ரிச்சர்ட்சன் மும்பை இந்தியன்ஸ்;

கடந்த வருட மெகா ஏலத்தில் சரியான வேகப்பந்து வீச்சு கூட்டணியில்லாமல் புள்ளி பட்டியலில் கடைசி அணியாக வந்து அதிர்ச்சி அளித்தது மும்பை அணி. இந்த முறை ஆர்ச்சர், பும்ரா இருக்க மீண்டும் மும்பை அணி பழைய தீ மாதிரியான வேகத்தில் கிளம்பி வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்க, பும்ரா காயத்தில் விளையாட முடியாமல் போனதோடு தற்பொழுது இந்த ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளரும் காயத்தால் விலகி இருப்பது மும்பை அணிக்கு அடிமேல் அடியாக ஆகி இருக்கிறது!