மூன்றாவது டெஸ்ட் முதல் நாளில் உடைக்கப்பட்ட ஐந்து சாதனைகள்!

0
826
Indvsaus

நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் துவங்கியது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்று பேட்டிங் செய்வதென ரோகித் சர்மா தீர்மானிக்க, இந்திய அணி 33.2 ஓவரில் 109 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து சுருண்டது!

இந்த மூன்றாவது டெஸ்டின் முதல் நாள் ஆட்ட முடிவின்போது ஐந்து சாதனைகள் முறியடிக்கப்பட்டு இருக்கின்றன. அந்த ஐந்து சாதனைகள் என்னவென்று இந்த சிறிய கட்டுரையில் பார்ப்போம்!

- Advertisement -

நாதன் லயன் ஆஸ்திரேலியா :

இன்று நாதன் லயன் புஜாரா, ஜடேஜா பரத் என மூன்று இந்திய பேட்ஸ்மேன்களை வீழ்த்தினார். இதன் மூலம் ஆசியக் கண்டத்தில் அதிக விக்கட்டுகளை வீழ்த்திய வெளிநாட்டவர் என்ற சாதனையைப் படைத்தார். ஷேன் வார்னே 127 விக்கட்டுகள் எடுத்திருந்தார். நாதன் லயன் தற்பொழுது 129 விக்கட்டுகள் எடுத்திருக்கிறார்!

ஆஸ்திரேலியா:

- Advertisement -

இந்தியாவில் இந்தியாவை குறைந்த ஓவர்களில் டெஸ்ட் போட்டியில் ஆல் அவுட் செய்த தனது சாதனையை தானே இந்த முறை ஆஸ்திரேலியா முறியடித்துக் கொண்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு புனே மைதானத்தில் 33.5 ஓவரில் இந்திய அணியை சுருட்டி இருந்த ஆஸ்திரேலியா இந்த முறை 33.2 ஓவரில் சுருட்டி தனது சாதனையை முறியடித்துக் கொண்டது!

ரோகித் சர்மா இந்தியா :

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக முறை விக்கெட் கீப்பரால் ஸ்டம்பிங் செய்யப்பட்டவர் என்ற மோசமான சாதனைக்கு இந்திய கேப்டன் ரோஹித் சர்மா நான்காவது முறையாக இந்த முறையில் ஆட்டம் இழந்து சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுசேன் மூன்று முறை ஸ்டம்பிங் முறையில் ஆட்டம் இழந்து இருந்தார்.

இந்தியா:

இந்தூர் ஹோல்ஹர் மைதானத்தில் இதற்கு முன்பு குறைந்தபட்ச ரன்னாக 150 ரன்னை பங்களாதேஷ் பதிவு செய்து இருந்தது. தற்பொழுது 109 ரன்களில் சுருண்டு இந்திய அணி பங்களாதேஷின் மோசமான சாதனையை முறியடித்து புதிய மோசமான சாதனையை படைத்திருக்கிறது!

மேத்யூ குகனேமான் ஆஸ்திரேலியா :

இந்த இடது கை சுழற் பந்துவீச்சாளர் இன்று 16 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்தூர் மைதானத்தில் வெளிநாட்டவரின் சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்திருக்கிறார். இதற்கு முன்பு பங்களாதேஷ் வந்துவீச்சாளர் அபு ஜயித் 108 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது!