“நடந்த 14 போட்டிகளிலும், நான் ரிங்கு சிங் பற்றி மட்டுமே பேசியுள்ளேன்; உலகத்துக்கே அவன் யாருன்னு தெரிஞ்சிருச்சு, எனக்கு ரொம்ப சந்தோஷம்” – நிதிஷ் ராணா பெருமிதம்!

0
3631

“இந்த சீசனில் 14 போட்டிகளிலும் நான் ரிங்கு சிங்கை பற்றி பேசி உள்ளேன் என்று நினைக்கிறேன். அவரைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை, உலகமே அவரது ஆட்டத்தை பார்த்துள்ளது.” என்றார் நிதிஷ் ராணா!.

கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டு அணிகளுமே இன்றைய போட்டியில் பலப்பரிச்சை மேற்கொண்டன. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு ஜேசன் ராய் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் நல்ல துவக்கம் அமைத்துக் கொடுத்தனர். மிடில் ஆர்டரில் வந்த பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தடுமாற்றம் கண்டது.

கடைசியில் வந்த ரிங்கு சிங், அணியை சரிவிலிருந்து மீட்டு 32 பந்துகளில் 67 ரன்கள் விளாசி லக்னோ அணிக்கு பயத்தை உண்டாக்கினார். ஆனால் துரதிஷ்டவசமாக 1 ரன்னில் கொல்கத்தா அணி தோல்வியை தழுவியது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதால் லக்னோ அணி நேரடியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது.

இன்றைய போட்டியில் தோல்வியை தழுவி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெறாமல் வெளியேறிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக இருக்கும் நித்திஷ் ராணா, போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்தார். அவர் பேசியதாவது:

- Advertisement -

“இன்றைய போட்டியின் முடிவு எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. ஆனால் இதிலிருந்து நிறைய நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ள வேண்டியது இருக்கிறது. அதேபோல நிறைய மாற்றங்கள் மற்றும் சில தவறுகளை சரி செய்துகொள்ள வேண்டியது இருக்கிறது. கண்டிப்பாக அடுத்த சீசனில் இன்னும் ஆக்ரோஷத்துடன் வருவோம். எங்களது பலவீனத்தை பலமாக்குவோம்.

ஐபிஎல் போன்ற தொடரில் மூன்று டிபார்ட்மெண்டிலும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். சில போட்டிகளில் எங்களுடைய பேட்டிங் நன்றாக இருந்தது. சில போட்டிகளில் பௌலிங் நன்றாக இருந்தது. வெகு சில போட்டிகளிலேயே மூன்றையும் நன்றாக வெளிப்படுத்தினோம்.

பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறாதது வருத்தம் அளிக்கிறது. ஏனெனில் இந்த கொல்கத்தா அணி முதல் நான்கு இடத்திற்குள் வந்திருக்க வேண்டிய அணி. ஆங்காங்கே செய்த சில தவறுகளால் அந்த வாய்ப்பை தவற விட்டுவிட்டோம். இந்த தவறுகளை சரிசெய்ய முற்படுவோம்.

விளையாடிய அனைத்து போட்டிகளிலும், போட்டி முடிந்தபிறகு நான் ரிங்கு சிங் பற்றியே பேசியுள்ளதாக உணர்கிறேன். தனிப்பட்ட முறையில் அவர் இவ்வளவு வளர்ச்சியை பெற்றிருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது. அவரைப் பற்றி வார்த்தைகளால் என்னால் கூற முடியவில்லை. ஆனால் அவரது ஆட்டத்தை உலகமே பார்த்திருக்கிறது.” என்றார்.