அன்று தந்தையின் அடி உதை; துப்புரவு வேலை ; இன்று இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர்!

0
185
Rinkusingh

யார் இந்த ரிங்கு சிங்?

கிரிக்கெட்டில் யுவராஜ் சிங், பொல்லார்டு என ஆறு சிக்ஸர்கள் அடித்துப் பார்த்திருக்கிறோம். இந்திய உள்நாட்டு வெள்ளைப்பந்து தொடரில் நோபாலோடு சேர்த்து, ருதுராஜ் ஏழு சிக்ஸர்களையும் அடித்திருக்கிறார்.

- Advertisement -

ரிங்கு சிங் அடித்த தொடர்ச்சியான ஐந்து சிக்ஸர்கள், ஒரு ஓவரில் அடிக்கப்பட்ட ஆறு, ஏழு சிக்ஸர்களை விட எதனால் பெரியதாகப் பார்க்கப்படுகிறது? ரிங்கு சிங்கின் ஐந்து சிக்ஸர்களும் சேசிங்கில் வந்தது. மேலும் கடைசி ஐந்து பந்துகளுக்கு 28 ரன்கள் தேவை என்கின்ற பொழுது வந்தது. இந்தப் புள்ளியில்தான், ஒரு ஓவரில் தொடர்ச்சியாக அடிக்கப்பட்ட சிக்ஸர்களுக்கான மணிமகுடத்தை இந்த ஐந்து சிக்ஸர்கள் நிகழ்வு சூடிக்கொள்கிறது !

இடது கையில் பேட்டிங்கும் வலது கையில் சுழற் பந்துவீச்சும் வீசக்கூடிய ரிங்கு சிங், 1997- ல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அலிகார் நகரத்தில் 5 பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் பிறக்கிறார். பொருளாதாரத்தில் வறுமைக்கோட்டில் நடக்கும் குடும்பம். தந்தை கேஸ் சிலிண்டர்களை வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யக்கூடியவர்.

சிறுவயதில் ரிங்கு சிங் பள்ளி முடிந்தால் தந்தையுடன் சேர்ந்து அவரது வேலையில் உதவி விட்டுதான் கிரிக்கெட் விளையாட வேண்டும். இல்லையென்றால் தந்தையிடம் அடிஉதை நிச்சயம். ஆனால் பொதுவாக ரிங்கு சிங் கிரிக்கெட் விளையாடி விட்டு வீட்டிற்கு வந்தாலே அவரது தந்தையிடம் அடிஉதை உறுதியாக கிடைக்கும் என்ற நிலைதான் இருந்திருக்கிறது.

- Advertisement -

ஒரு பந்தைக் கூட சொந்தமாக வாங்கி விளையாட முடியாத நிலையில் தாக்குப்பிடித்து கிரிக்கெட்டை தொடர்கிறார். ஒரு சமயத்தில் உள்ளூர் கிரிக்கெட் தொடரொன்றில் விளையாடி பரிசாக ஒரு மோட்டார் சைக்கிள் கிடைக்கிறது. அதை தன் தந்தைக்கு பரிசளிக்கிறார். அது அவரது தந்தையின் தொழிலுக்கு உதவியாகிறது. இந்த நிகழ்வின் புள்ளியில் இருந்துதான் இவரது கிரிக்கெட்டுக்கான எதிர்ப்பு தந்தையிடம் குறைய ஆரம்பித்திருக்கிறது. ஆனாலும் வறுமையின் காரணமாக பொருளாதாரரீதியாக குடும்பம் இவருக்குப் பெரிதாகச் செய்ய முடியாத சூழல்தான் இருந்திருக்கிறது.

ஆனால் இவர் குடும்பத்துக்கு ஏதாவது செய்ய வேண்டிய நிலையில், ஒரு பயிற்சி மையத்தில் தரைகளை சுத்தம் செய்யும் துப்புரவாளர் வேலை கிடைத்திருக்கிறது. கட்டாயம் அதற்குப் போய் ஆக வேண்டிய நிலை. ஆனால் அது தன்னுடைய மொத்த கிரிக்கெட் கனவையும் கலைத்துப் போடுமென்று ரிங்கு சிங் உணர்ந்து இருக்கிறார்.

இப்படியான நிலையில்தான் இவருக்கு உள்ளூரில் இருந்து முகமது ஜீசன் என்பவரது உதவி கிடைத்திருக்கிறது. இவர் அடுத்த கட்டத்துக்கு நகர மசூத் அமின் என்பவர் இவரை வழிநடத்தியதோடு, இப்பொழுதும் பின்னால் இருக்கிறார். யார் செய்த உதவியையும் மறக்காதவராக ரிங்கு சிங்கும் இருக்கிறார்!

வாழ்க்கை இப்படி போய்க்கொண்டிருக்க 2017 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அடிப்படை விலைக்கு பஞ்சாப் அணி வாங்குகிறது. ரிங்கு சிங்கின் கிரிக்கெட் கனவுப்புத்தகத்தின் அட்டை திறக்கிறது. அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் 80 லட்ச ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவரை வாங்க, அந்தப் பணம் ரிங்கு சிங் குடும்பத்தில் மொத்த கடன்களையும் அடைக்க உதவியதோடு, நிலம், ஆபரணங்கள் போன்றவற்றையும் வாங்கும் அளவுக்கு மாற்றி இருக்கிறது. இதற்கு மேல் அவருக்கு எல்லாமே மாறி இருக்கும் என்று நினைத்தால் அதுதான் கிடையாது!

2018 ஐபிஎல் மெகா ஏலத்தில் 80 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டவர், அடுத்து 2022 ஐபிஎல் மெகா ஏலத்தில் அதே கொல்கத்தா அணியால் 55 லட்ச ரூபாய்க்குதான் வாங்கப்பட்டார். ஆனால் அவர் இதற்காகக் கவலைப்படவில்லை. தன்னை அழுத்தமாக நிரூபிக்கும் ஒரு வாய்ப்பிற்காகத்தான் காத்திருந்தார்.

அப்படியான ஒரு வாய்ப்பு கடந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியுடன் அமைந்தது. அந்தப் போட்டியை வெல்ல கடைசி ஓவரில் 21 ரன்கள் கொல்கத்தா அணிக்கு தேவைப்பட்டது. முதல் நான்கு பந்துகளை சந்தித்த ரிங்கு சிங் 4, 6, 6, 2 என்று 18 ரன்களை அடித்து, ஐந்தாவது பந்தில் ஆட்டத்தை முடித்துவிடும் நோக்கத்தில் போக எவின் லீவிசின் அற்புதமான கேட்ச்சால் ஆட்டம் இழந்து விட்டார். அந்தப் போட்டியில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோற்றது. அவர் இதற்காகத்தான் கவலைப்பட்டவராக இருந்தார்!

ஆனால் காலம் சோதிக்கும் அளவுக்கு வாய்ப்புகளையும் திரும்பத் தரும், வந்திருப்பது வாய்ப்புதான் என்று உணர்ந்து, யாரெல்லாம் நம்பிக்கையோடு அதைக் கைப்பற்றி செயலாற்றுகிறார்களோ, அவர்களை உச்சத்தில் வைக்கும். இது காலத்தின் காலங்காலமான பழக்கம்.

நேற்று இப்படித்தான் ஒரு வாய்ப்பை காலம் ரிங் சிங்குக்கு வழங்கியது. அவரும் அதை உணர்ந்து கைப்பற்றி மூர்க்கமான எதிர்வினை ஆற்றினார். இந்த முறை கடந்த முறைபோல் இல்லாமல் சோதனையை வென்று சாதித்தார் ரிங்கு சிங்.

நேற்றிலிருந்து இன்று வரை இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபராக, பேசப்பட்ட நபராக ரிங்கு சிங்தான் இருக்கிறார். ஜாம்பவான் வீரர்களிடமிருந்து பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்து கொண்டிருக்கின்றன. கடினப்பட்டு ஒன்றை அடைந்தவனுக்கு அதன் அருமை நன்றாகவே தெரியும். ஆகவே கிடைத்த எல்லாவற்றையும் ரிங்கு சிங் தக்க வைத்து மேலும் முன்னேறுவார்! முன்னேறட்டும்!