டெவான் கான்வெ, பாப் டு பிளஸிஸ்.. யாருடன் ஓபனிங் இறங்குவது பெஸ்ட்? – ஆட்டநாயகன் ருத்துராஜ் கெய்க்வாட் பேட்டி!

0
6541

டெவான் கான்வெ மற்றும் பாப் டு பிளசிஸ் இருவரும் ஓபனிங் இறங்கும்பொழுது, எப்படிப்பட்ட அணுகுமுறை கொண்டவர்கள்? யாருடன் ஓப்பனிங் இறங்குவது சிறப்பாக இருக்கும்? ஆகியவை பற்றி தனது பேட்டியில் பதிலளித்துள்ளார் ருத்துராஜ் கெய்க்வாட்.

2023 ஐபிஎல் சீசன் பிளே-ஆப் சுற்றை எட்டியுள்ளது. புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்கள் பிடித்த குஜராத் மற்றும் சிஎஸ்கே அணிகள் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் முதல் குவாலிபயர் போட்டியில் மோதின. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக பைனலுக்கு செல்லும்.

- Advertisement -

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 172 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக, ருத்துராஜ் 60 ரன்கள் விளாசினார். நல்ல பாட்னர்ஷிப் அமைத்த டெவான் கான்வெ 40 ரன்கள், கடைசியில் வந்து கேமியோ விளையாடிய ஜடேஜா 22 ரன்கள் அடித்துக்கொடுத்தார்.

இந்த இலக்கை துரத்திய குஜராத் அணிக்கு சகா 12 ரன்களுக்கு ஆட்டம் இழந்து மோசமான துவக்கத்தை கொடுத்துச் சென்றார். அடுத்து உள்ளே வந்த ஹர்திக் பாண்டியா 8 ரன்களுக்கும், சனக்கா 14 ரன்களுக்கும் ஆட்டம் இழந்ததால் குஜராத் அணி திணறியது.

ஒரு பக்கம் சுப்மன் கில் தனது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்குவிக்க உதவி வந்தார். ஆனால் உள்ளே வந்த மில்லர் 4 ரன்கள், திவாட்டியா மூன்று ரன்கள் என இருவரும் மோசமாக ஆட்டமிழந்து வெளியேற 98 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்தது குஜராத் அணி.

- Advertisement -

ஆட்டம் மெல்ல மெல்ல சிஎஸ்கே அணியின் பக்கம் சென்றது. பின்னர் தீபக் சகர் பந்தில் அடிக்க முயற்சித்து சுப்மன் கில் ஆட்டமிழக்க, சிஎஸ்கே அணிக்கு கூடுதல் நம்பிக்கையும் பிறந்தது. கடைசியில் வந்து சிக்ஸர் பவுண்டர்களாக விளாசிய ரஷித் கான் 16 பந்துகளில் 30 ரன்கள் அடித்தார். இவரும் பினிஷ் செய்து கொடுக்க முடியவில்லை.

20 ஓவர்களில் 159 ரன்களுக்கு குஜராத் அணியை ஆல்அவுட் செய்த சிஎஸ்கே அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் பைனலுக்கும் முன்னேறியது.

ஓப்பனிங் இறங்கி 44 பந்துகளில் 60 ரன்கள் அடித்து வெற்றிக்கு அடித்தளம் அமைத்த ருத்துராஜ் கெய்க்வாட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் பேட்டி அளித்ததாவது:

“சீசனின் துவக்கத்தில் சென்னை பிட்ச் பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருந்தது. கடந்த 2-3 போட்டிகள் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. பெரிதளவில் அடிக்க முயற்சிக்காமல் ஸ்டிரைக் எடுத்து ஓரிரு ரன்கள் எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். சில தவறான பந்துகளை பவுண்டரிகளாக மாற்றுவதற்கு பார்க்க வேண்டும். இதுதான் என்னுடைய அணுகுமுறையாக இருந்தது.”

“(டு பிளஸிஸ், டெவான் கான்வெ இருவருடனும் ஓபனிங் ஆடியது பற்றி) கான்வெ, பாப் இருவரும் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள். பாப் வந்த முதல் பந்திலிருந்து அடித்து விளையாட வேண்டும் என்கிற ஆக்ரோஷமான அணுகுமுறை கொண்டவர். கான்வே எதிரே இருக்கும் வீரர் எப்படி அணுகுகிறார் என்பதை பொறுத்து தன்னுடைய பேட்டிங்கை வைத்துக்கொள்வார் இருவரும் வெவ்வேறு அணுகுமுறை கொண்டவர்கள். இருவருடனும் விளையாடுவது சிறந்த அனுபவத்தை கொடுக்கிறது. இருவரும் பெஸ்ட் ஓப்பனர்கள்.”

(60 ரன்கள் அல்லது கேட்ச், இரண்டில் எது பெஸ்ட்) “இன்று நான் அடித்த 60 ரன்கள் முக்கியமான கட்டத்தில் மற்றும் பேட்டிங் செய்ய ஏதுவாக இல்லாத பிட்சில் வந்தவை. ஆகையால் என்னுடைய கேட்சை விட, நான் அடித்த 60 ரன்களை பெஸ்ட்டாக கருதுகிறேன்.” என்றார்.